துலீப் டிராபி கிரிக்கெட் | தென் மண்டல அணி சாம்பியன்

கோப்பையுடன் தென்மண்டல அணியினர்
கோப்பையுடன் தென்மண்டல அணியினர்
Updated on
2 min read

பெங்களூரு: துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியில் தென் மண்டல அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு மண்டல அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

துலீப் டிராபி கிரிக்கெட் போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு தென் மண்டலம், மேற்கு மண்டல அணிகள் முன்னேறின. இந்நிலையில் இறுதிப் போட்டி கடந்த 12-ம் தேதி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் தென் மண்டல அணி 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஹனுமா விஹாரி 63, திலக் வர்மா 40, மயங்க் அகர்வால் 28, வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் எடுத்தனர்.

மேற்கு மண்டல அணி சார்பில் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்களையும், நாக்வாஸ்வாலா, சிந்தன் காஜா, டி.ஏ.ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஏ. ஷேத் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய மேற்கு மண்டல அணி 51 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பிரித்வி ஷா அதிகபட்சமாக 65 ரன்கள் குவித்தார். கேப்டன் பிரியங்க் பஞ்சால் 11, ஹர்விக் தேசாய் 21 ரன்கள் சேர்த்தனர். தென் மண்டல அணி தரப்பில் வித்வத் காவேரப்பா 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களைச் சாய்த்தார். வைசாக் விஜயகுமார் 2 விக்கெட்களையும், வி. கவுஷிக் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தென் மண்டல அணி 67 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் மண்டல அணி 81.1 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹனுமாவிஹாரி 42, விக்கெட் கீப்பர் புய் 37, வாஷிங்டன் சுந்தர் 37 ரன்களை எடுத்தனர். மேற்கு மண்டல அணி தரப்பில் டி.ஏ. ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து வெற்றி இலக்காக மேற்கு மண்டல அணிக்கு 298 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் மேற்கு மண்டல அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களை எடுத்திருந்தது.

கேப்டன் பிரியங் பஞ்சால் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். சாம்பியன் பட்டத்தை வெல்ல மேற்கு மண்டலத்துக்கு 116 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

கடைசி நாள் ஆட்டத்தில் பிரியங் பஞ்சால் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சர்பிராஸ் கான் 48, டி.ஏ.ஜடேஜா 15 ரன்களுக்கு வீழ்ந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில் 84.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு மேற்கு மண்டல அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் மண்டல அணி, துலீப்கோப்பையை வென்றது. வித்வத்காவேரப்பா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றார். சாய் கிஷோர், வாசுகி கவுஷிக் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர்.

இது தென் மண்டல அணியின் 14வது துலீப் கோப்பை சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in