

பாரிஸ்: விம்பிள்டன் ஜாம்பவான் பெடரரை தலைவா என்று அழைத்தது தமிழுக்கு பெருமை என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிபபிட்டார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்கு சென்ற வந்த பிரதமர் மோடி, பாரீஸ் நகரில் இந்திய சமூகத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
செயின் நதியின் நடுவே ஒரு தீவில் அமைந்துள்ள ‘லா செயின் மியூசிக்கல்’ எனும் பிரம்மாண்ட அரங்கில் இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: உலகம் புதிய ஒழுங்குமுறையை நோக்கி பயணிக்கும் சூழலில், இந்தியாவின் வலிமையும் பங்களிப்பும் வேகமாக மாற்றம் கண்டு வருகிறது. ஜி20 அமைப்பின் கூட்டங்கள் உள்பட பல்வேறு நிகழ்வுகளை இந்தியா நடத்தும் விதம் உலகை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் 32,000-க்கும் மேற்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் 900-க்கும் மேற்பட்ட செய்தித்தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.
உலகின் மூத்த மொழி தமிழ். இது இந்தியாவுக்கே பெருமைக்குரிய விஷயமாகும்.
இந்திய மொழியின் இந்த பன்முகத்தன்மையை நாம் இந்தியர்கள் மட்டுமல்ல, உலகமும் இப்போது அனுபவித்து வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரரை ‘தலைவா’என்று அழைத்ததை நீங்கள் சிலநாட்களுக்கு முன்பு பார்த்திருப்பீர்கள். இந்த பன்முகத்தன்மை நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாகும். இந்த பலத்தின் மூலம் மட்டுமே, ஒவ்வொரு இந்தியரும் தனது கனவுகளை அடைகின்றனர். மேலும், தேசத்தையும் உலகையும் முன்னோக்கி கொண்டு செல்கின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்’ என்ற திருக்குறளையும் அப்போது பிரதமர் மேற்கோள் காட்டினார்.