

பாங்காக்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல் போட்டியிலும், பாருல் சவுத்ரி ஸ்டீபிள்சேஸ் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றனர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் 25-வதுஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான நேற்று ஆடவருக்கான குண்டு எறிதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.23 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். ஈரானின் சபேரி மெஹ்தி (19.98), கஜகஸ்தானின் இவான் இவானோவ் (19.87) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் 28 வயதான தஜிந்தர்பால் சிங். இந்த வகையில் இதற்கு முன்னர் கத்தார் வீரர் பிலால் சாத் முபாரக் இருமுறை பட்டத்தை தக்கவைத்திருந்தார். குவைத் வீரர் முகமது கரீப் அல் ஜின்காவி தொடர்ச்சியாக 1979, 1981, 1983-ம் ஆண்டுகளில் தங்கம் வென்றிருந்தார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தஜிந்தர் பால் சிங், இரு முயற்சிகளுக்கு பின்னர் பின்வாங்கினார். இந்த போட்டியில் அவர், வலது மணிக்கட்டில் கட்டுப்போட்டிருந்த நிலையிலேயே பங்கேற்றார். காயத்தின் தன்மை அதிகரித்ததால் இரு முயற்சிகளுக்குப் பின்னர், அவர் குண்டு எறியவில்லை. இதுதொடர்பாக தஜிந்தர்பால் சிங் கூறும்போது, “காயம் காரணமாக வலி ஏற்பட்டதால் குண்டு எறிவதை நிறுத்திவிட்டேன்.
தாய்லாந்துக்கு வந்து சேர்ந்ததுமே வலி தொடங்கிவிட்டது. இரண்டாவது முயற்சிக்குப் பிறகு வலி அதிகரித்ததால் நான் பின்வாங்க முடிவு செய்தேன். கவலைப்படும்படி ஒன்றுமில்லை, அடுத்த 10 நாட்களில் முழுமையாக குணமடைந்துவிடுவேன்” என்றார்.
மகளிருக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தயதூரத்தை 9:38.76 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜப்பானின் சுமைர் ஹடா (6.97) தங்கப் பதக்கமும், சீனாவின் ஜாங் ஜியாவி (6.46) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் முதல் நாளில் வெண்கலப் பதக்கம் மட்டும் வென்றிருந்த இந்தியா, 2வது நாளில் 3 தங்கம், 2 வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இந்தத் தொடரில் இந்திய அணி இதுவரை 5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. -பிடிஐ