

டொமினிகா: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா ஆகியோர் சதம் விளாசினர்.
டொமினிகாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்தது. ரோஹித் சர்மா 30, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 ரன்களுடன் நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
அறிமுக வீரரான ஜெய்ஸ்வால் 215 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய 14-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெய்ஸ்வால். மேலும் அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய 3-வது தொடக்க வீரர் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த வகையில் இதற்கு முன்னர் ஷிகர்தவண் 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்டிலும், பிரித்வி ஷா 2018-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அறிமுக டெஸ்டிலும் தொடக்க வீரர்களாக சதம் விளாசியிருந்தனர்.
கேப்டன் ரோஹித் சர்மா 220 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் தனது 10-வது சதத்தை அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த 229 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோஹித் சர்மா 103 ரன்கள் எடுத்த நிலையில் அலிக் அத்தானாஸ் பந்தில், விக்கெட் கீப்பர் ஜோசுவா டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஷுப்மன் கில் 11 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் பின்னர் களமிறங்கிய விராட் கோலி நிலைத்து நின்று விளையாடினார். 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 113 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. 2வது நாள் ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி 90 ஓவர்களை எதிர்கொண்டு 232 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் 143,விராட் கோலி 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் 387 பந்துகளை சந்தித்து, 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 171 ரன்கள் எடுத்த நிலையில் அல்ஸாரி ஜோசப் பந்தில் விக்கெட் கீப்பர் ஜோசுவா டி சில்வாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் இணைந்து ஜெய்ஸ்வால் 110 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 3 ரன்களில் கேமர் ரோச் பந்தில் நடையை கட்டினார். தொடர்ந்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா சீராக ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 147 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் கடந்தார்.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 142 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 400 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 72 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.