

புதுடெல்லி: ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, கொரியா, மலேசியா, ஜப்பான், பாகிஸ்தான், சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுக விழா டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய மைதானத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் திலீப் குமார் திர்கே, பொதுச் செயலாளர் போலா நாத் சிங், பொருளாளர் சேகர் மனோகரன் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ‘பாஸ் தி பால்’ பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதில் அமைச்சர் அனுராக் தாக்குர் ஹாக்கி மட்டையால் பந்தை டிரிப்ளிங் செய்து இந்திய ஹாக்கி ஜாம்பவான் ஜாபர் இக்பாலுக்கு அனுப்பினார். டெல்லி, சண்டிகர், குவாஹாட்டி, பாட்னா, புவனேஸ்வர், ராஞ்சி, பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் போட்டியை நடத்தும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்குக் கோப்பை பயணிக்க உள்ளது.