

கொழும்புவில் நடைபெறும் இலங்கை-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்துள்ளது.
மகேலா ஜெயவர்தனே 140 ரன்கள் எடுத்தும், டிக்வெல்லா என்ற புதிய வீரர் 12 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
தரங்கா (11), சங்கக்காரா (0) ஆகியோர் விக்கெட்டுகளை 5வது ஓவரின் 5வது பந்து மற்றும் 6வது பந்தில் வீழ்த்தி ஹேட்ரிக் வாய்ப்பு பெற்றார் டேல் ஸ்டெய்ன்.
16/2 என்ற நிலையில் சில்வா (44), ஜெயவர்தனே ஆகியோர் இணைந்து ஸ்கோரை 115 ரன்களுக்கு உயர்த்தினர். சில்வா டுமினி பந்தில் அவுட் ஆனார். பிறகு ஆஞ்சேலோ மேத்யூஸ், ஜெயவர்தனே ஜோடி 131 ரன்களைச் சேர்த்தனர். மேத்யூஸ் 63 ரன்கள் எடுத்து டுமினி பந்தை கட் செய்ய முயன்று அவுட் ஆனார்.
ஜெயவர்தனேயிற்கு பிடித்த மைதானம் இது. இங்குதான் அவர் படுமட்டமான பேட்டிங் ஆட்டக்களத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 374 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குஷல் சில்வா 10 ரன்களில் இருந்தபோது பிலாண்டர் பந்தில் கேட்ச் ஒன்றைக் கொடுக்க அதனை 3வது ஸ்லிப்பில் அல்விரோ பீட்டர்சன் தவறவிட்டார்,
ஜெயவர்தனே தனது 49வது டெஸ்ட் அரைசதத்தை 58 பந்துகளில் எடுத்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஜெயவர்தனே டீன் எல்கர் வீசிய புல்டாஸை ஸ்வீப் செய்து 2 ரன்கள் ஓடி தனது 34வது சதத்தை எடுத்தார்.
மேத்யூஸ் தனது அரைசதத்தை 100 பந்துகளில் எடுத்தார். பிறகு மோர்னி மோர்கெல் பவுன்சர் ஒன்றை வீச அனுபவமற்ற வீரரான விதனாகே(13), அதனைத் தடுத்தாட முயன்று பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் திசையில் டிவிலியர்ஸிடம் சிக்கியது.
நாளை ஆட்டத்தின் 2வது நாள்.