

முரளி விஜய்யின் அபார சதத்தின் துணையுடன், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கிஸ்சில், இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்துள்ளது.
அணிக்கு வலுவான துவக்கத்தைத் தந்த முரளி விஜய், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 294 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
முரளி விஜய்க்கு பக்க பலமாக இருந்த கேப்டன் தோனி, மறுமுனையில் 64 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து, அதிரடி அரைசதத்து ஆட்டமிழக்காமல் அணியின் ரன் எண்ணிக்கை உயர உறுதுணை புரிந்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ட்ரெண்ட் பிரிட்ஜ் நகரில் இன்று (புதன்கிழமை) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இளம் வீரர் ஸ்டூவர்ட் பின்னி தனது முதல் போட்டியில் விளையாடுகிறார்.
துவக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான், சிறப்பான துவக்கத்தை தந்தனர். முதல் ஓவரிலேயே விஜய் மூன்று பவுண்டரிகளை எடுத்தார். தொடர்ந்து விஜய் பவுண்டரிகளை விளாசினாலும் மறுமுனையில் தவான் நிதானமாகவே விளையாடினார். 12 ரன்கள் எடுத்திருந்த போது, ஆண்டர்சன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து தவான் வெளியேறினார்.
தொடர்ந்து வந்த புஜாரா டெஸ்ட் போட்டிக்கே உரிய பாணியில் விளையாட, அணியின் ஸ்கோர் நிதானமாக உயர்ந்தது. பின்னர், புஜாரா 38 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆண்டர்சன் பந்துவீச்சில் பெல்-லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். அவர், பிராட் பந்துவீச்சில் பெல்-லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர், முரளி விஜய்க்கு உறுதுணையாக இருந்த ரஹானே 81 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில், பிளங்கெட் பந்துவீச்சில் குக்-கிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து முரளி விஜய் - தோனி இணை வலு சேர்த்தது.
இன்றைய ஆட்டநேர முடிவில், இந்திய அணி வலுவான துவக்கத்துடன் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்ததிருந்தது.