Published : 14 Jul 2023 08:32 AM
Last Updated : 14 Jul 2023 08:32 AM
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் செக்குடியரசு வீராங்கனையான மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் 42-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் மார்க்கெட்டா வோண்ட்ரூசோவா, 76-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வோண்ட்ரூசோவா 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு வோண்ட்ரூசோவா தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஆடவருக்கான இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற நேர் செட் கணக்கில் இங்கிலாந்தின் நீல் ஸ்குப்ஸ்கி, நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் ஜோடியிடம் தோல்வி அடைந்தது.
ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கரஸ், 6-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூனை எதிர்த்து விளையாடினார். இதில் அல்கரஸ் 7-6 (7-3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
அரை இறுதி சுற்றில் 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதுகிறார் அல்கரஸ். டேனியல் மேத்வதேவ் கால் இறுதி சுற்றில் 6-4, 1-6, 4-6, 7-6 (7-4), 6-1 என்ற செட் கணக்கில் 43-ம் நிலை வீரரான அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT