

டொமினிகா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதேபோல், இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் சதம் அடித்தார்.
215 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகளுடன் தனது முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்தார். டொமினிகாவில் நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. மேற்கு இந்தியத் தீவுகளின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.
இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் , ரோகித் சர்மா 30 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் விரைவாக ரன்கள் சேகரிப்பதில் தீவிரம் காட்டினார். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் 215 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஷிகர் தவான், ப்ரித்வி ஷா போன்றோர் இந்த சாதனையை படைத்தனர்.
ரோகித் சதம்: ஜெய்ஸ்வால் சதம் அடித்த சிறிதுநேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவும் சதம் அடித்தார். 220 பந்துகளைச் சந்தித்த ரோகித் 10 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் தனது 10வது சதத்தை பதிவு செய்தார். 99 ரன்களில் இருந்த அவர் பவுண்டரி அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த மறுப்பந்திலேயே ரோகித் கேட்ச் ஆனார். 103 ரன்களில் ரோகித் வெளியேற இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து மேற்கு இந்திய தீவு அணியை விட 79 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.