Published : 13 Jul 2023 11:43 PM
Last Updated : 13 Jul 2023 11:43 PM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் | "வீழ்ச்சி இல்லாமல் எந்த உயர்வும் இல்லை" - அஸ்வின் ஆதங்கம்

டொமினிகா: உலகின் நம்பர்.1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்தியராகி உள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளார். முன்னதாக, சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ப்ளேயிங் லெவனில் அஸ்வின் இடம்பெறாதது சர்ச்சையானது.

அதன்பிறகு அஸ்வின் ஆடும் டெஸ்ட் போட்டி இதுதான். இந்தப் போட்டியில் முத்திரை பதித்து தான் ஓரம்கட்டப்பட்டது தவறு என்பதை அணி நிர்வாகத்துக்கு உணர வைத்துள்ளார். உலகின் நம்பர்.1 டெஸ்ட் பந்துவீச்சாளரான அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனதால் ஏமாற்றம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். நேற்றைய ஆட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை வெளிப்படுத்தினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வதே மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவேளை நாங்கள் அதை வென்றிருந்தால் என்னுடைய கேரியரின் உச்சமாக அதுவே அமைந்திருக்கும். அந்த ஃபைனலில் நானும் வெற்றியில் நல்ல பங்காற்றி இருக்கலாம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த போட்டியின் முதல் நாளே வெற்றி எங்கள் அணியை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டது.

அன்றைய தினம் எனக்காக மற்றொருவர் அணியில் நீக்கப்பட்டிருந்தால் அவர் என்ன நினைத்திருப்பார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னையும் மற்றொருவரையும் நீக்குவதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. எனவே, சக வீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட்டுக்கும் அனைத்தையும் புரிந்து கொண்டு களத்தில் என்னுடைய சிறந்த முயற்சிகளையும் ஆதரவையும் கொடுக்கவே விரும்புகிறேன். முடிந்ததைப் பற்றி பேசாமல் தொடர்ந்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுப்பேன்.

இந்த உலகில், ஒரு மனிதராகவும் ஒரு கிரிக்கெட்டராகவும் உச்சத்தைத் தொட்ட யாருமே வீழ்ச்சிகளைச் சந்திக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். அப்படி வீழ்ச்சிகளைச் சந்திக்கும்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகளே உள்ளன. ஒன்று, நீங்கள் அதைப்பற்றி புகார் கூறலாம், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம் அல்லது அந்த வீழ்ச்சியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். இதில் நான் இரண்டாம் வகை. வீழ்ச்சியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டவன் நான்.

இது மிகவும் எளிதான பயணம் அல்ல, உண்மையில் எனக்கு வந்த அனைத்து வீழ்ச்சிக்களுக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஏனென்றால் வீழ்ச்சி இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் எந்த உயர்வும் இல்லை" என்று தனது ஆதங்கத்தை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x