

3வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்குக் காரணமானவர்களில் முதன்மையான இங்கிலாந்து ஆஃப் ஸ்பின்னர் மொயீன் அலியிடம் இந்திய பேட்ஸ்மென்கள் சரணடைந்தது ஆச்சரியமளிக்கிறது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார்.
இஎஸ்பின் கிரிக் இன்ஃபோ இணையதள டாக் ஷோ ஒன்றில் அவர் இந்திய பேட்டிங் பிரச்சினைகள் பற்றி கூறியதாவது:
இந்திய பேட்ஸ்மென்களின் பிரச்சினை என்னவெனில் குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் ஒரே விதத்தில் திரும்பத் திரும்ப ஆட்டமிழப்பதுதான். அதாவது பவுலர்கள் இந்த பேட்ஸ்மென்களை வீழ்த்தும் முறையை கண்டுபிடித்துள்ளனர் என்று அர்த்தம். அதனை முறியடிக்க இவர்கள் ஏதும் செய்யாமல் இருப்பது கவலையளிப்பதாகும்.
ஒரேவிதமாக ஆட்டமிழக்கக் காரணம் என்னவென்பதைக் கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு அட்ஜெஸ்ட்மெண்ட்களை அவர்கள் செய்து கொள்ளவேண்டும். ஆனாலும் ஒரேவிதத்தில் ஆட்டமிழப்பது ஒரு மிகப்பெரிய கவலைதான்.
இதற்கு ஏதாவது வழிமுறையை அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். விராட் கோலி, புஜாராவிடம் அந்தத் திறமை உள்ளது. அவர்களிடம் அதற்கான ஸ்ட்ரோக்குகள் உள்ளன. இதனை அவர்கள் சரிசெய்யாத வரை அவர்கள் தன்னம்பிக்கையுடன் ஆடுவது கடினமே.
ஷிகர் தவான் 2வது இன்னிங்ஸில் ஓரளவுக்கு சரியாகவே ஆடினார். அவருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். சில நல்ல பந்துகள் விழும் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் மொயீன் அலியை அவர்கள் விளையாடத் திணறியதுதான் ஆச்சரியமாக உள்ளது. ஒட்டுமொத்த இந்த டெஸ்ட் போட்டியிலும் எனக்கு அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
இந்தியப் பிட்ச்களில் ஆடுவது போலவே ஆடுகின்றனர். இது பிரச்சனைதான். இங்கு அணுகுமுறை வேறுமாதிரியாக இருக்க வேண்டும். இந்தியப் பிட்ச்களில் முன்னால் சென்று டிரைவ் ஆடுவது வெகு சுலபம், ஆனால் இங்கு குறிப்பாக ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றவர்கள் இருக்கும்போது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை முன்னால் சென்று டிரைவ் ஆடுவது சிறந்த தேர்வு அல்ல.
இந்தப் பிட்ச் நல்ல பிட்ச், அனைவருக்கும் வாய்ப்பு இருந்தது. இவ்வாறு கூறினார் இயன் சாப்பல்.