Published : 13 Jul 2023 07:40 AM
Last Updated : 13 Jul 2023 07:40 AM
சென்னை: ஹெச்சிஎல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து சைக்கிளிங் போட்டியினை வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டிக்கான சீருடையை அறிமுகம் செய்தார். தொடர்ந்து அவர், பேசியதாவது:
ஹெச்சிஎல் சைக்கிளிங் பந்தயம் வரும் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெறும். இந்த போட்டி மூன்று பிரிவுகளின் கீழ் நடத்தப்படும். முதல் வகை தொழில்முறை வகையை சார்ந்தது. 55 கிலோ மீட்டர் கொண்ட இந்த பந்தயத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். அடுத்து அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலைப் பந்தயம் எனப்படும் மற்றொரு வகை உள்ளது. இது 25 கிலோ மீட்டர் பயணமாக இருக்கும். பொதுமக்கள் மற்றும் சைக்கிள்ஓட்டும் ஆர்வலர்கள் பங்கேற்கும் வகையில் 15 கிலோ மீட்டர் பந்தயமும் இடம் பெறுகிறது. இந்த சைக்கிள் பந்தயத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
செஸ் ஒலிம்பியாட், உலக ஸ்குவாஷ் போட்டியை சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். இதையடுத்து வரும் ஆகஸ்டில் ரூ.18 கோடி செலவில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரை நடத்த உள்ளோம். அதன் பின்னர் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக்நடைபெற உள்ளது. இது இந்தியாவின் முதல் சர்வதேச சர்ஃபிங் நிகழ்வு ஆகும். இந்த விளையாட்டுக்காக ரூ.2.67 கோடியை அரசு வழங்கி உள்ளது. முதன்முறையாக, பாரா-விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், 6 மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் பாரா ஸ்போர்ட்ஸ் அரங்கை அமைக்கவுள்ளோம். மாநிலத்தில் பாரா விளையாட்டுகளை ஊக்குவிக்கும் முதல் முதலீடு இதுவாகும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் சுந்தர் மகாலிங்கம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சைக்கிள் பந்தயத்துக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.30 லட்சம் எனவும் இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு வரும் செப்டம்பர் 20-க்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT