Published : 12 Jul 2023 06:17 AM
Last Updated : 12 Jul 2023 06:17 AM

மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி

புதிய சீருடையில் இந்திய அணி வீரர்கள்

டொமினிகா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள்இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் இன்று இரவு தொடங்குகிறது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 5 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் டொமினிகாவில் உள்ள வின்ட்ஸர் பார்க் மைதானத்தில் இன்று இரவு தொடங்குகிறது. இரு அணிகளுக்குமே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இது முதல் போட்டியாகும். இதனால் இந்தத் தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்திய அணியானது கடந்த ஜூன் மாதம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான தொடரை சந்திக்கிறது. அதேவேளையில் மேற்கு இந்தியத் தீவுகள் வரலாற்றில் முதன்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அணுகுகிறது.

வீரர்கள் கட்டமைப்பின் மாற்றங்களுக்கு தொடக்க புள்ளியாக இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் அமையக்கூடும். சீனியர் வீரரான சேதேஷ்வர் புஜாரா நீக்கப்பட்டுள்ளதால் அவரது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் களமிறக்கப்படக்கூடும். இதில் இடது கை பேட்ஸ்மேனான மும்பையை சேர்ந்த ஜெய்ஸ்வால் இடம் பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என கருதப்படுகிறது.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர், சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். இதில் விராட்கோலியின் சராசரி ரன்குவிப்பு கடந்த 3 ஆண்டுகளாகவே 30-க்கு கீழ் தான் இருக்கிறது. இதனால் அவர், புத்தெழுச்சியுடன் விளையாட வேண்டிய கட்டத்தில் இருக்கிறார். சமீபகாலமாக ஆஃப் ஸ்டெம்புகளுக்கு வெளியே வீசப்படும் பந்துகளில் விராட் கோலி தனது விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக உள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் பயிற்சியின் போதும் கூட விராட் கோலி இதே முறையில்வீழ்ந்தார். இதனால் அவர், கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும். அதேவேளையில் விராட் கோலியின் இந்த பலவீனத்தை மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கக்கூடும்.

துணை கேப்டனாக அணிக்கு திரும்பி உள்ள அஜிங்க்ய ரஹானே, பொதுவாகவே வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடக்கூடியவர். இந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரஹானே சிறப்பாக விளையாடி இருந்தார். இதே பார்மை தொடரச் செய்வதில் அவர், முனைப்பு காட்டக்கூடும். விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் இடம் பெறுவார். டெஸ்ட் போட்டி என்பதால் இஷான் கிஷனை விட அவருக்கு முன்னுரிமை வழங்கப்படக்கூடும்.

சுழற்பந்து வீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெறுவார்கள். ஆடுகளம் வேகப்பந்து வீச்சு சாதகமாக இருந்தால் ஷர்துல் தாக்குர் இடம் பெறுவார். இல்லையெனில் அந்த இடத்தை அக்சர் படேல் தட்டிச்செல்லக்கூடும். வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விளையாடாத நிலையில் மொகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவும் காயம் அடைந்துள்ளார்.

இதனால் இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறை அனுபவம் இல்லாததாகவே களமிறங்குகிறது. 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள மொகமது சிராஜ் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 9 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளனர். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ளார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியானது கிரெய்க் பிராத் வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணிக்கு இந்த தொடர்சோதனைகளும், சவால்களும் நிறைந்ததாக இருக்ககூடும். ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் சர்வதேசகிரிக்கெட் அரங்கில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளனர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர்.

இடது கை பேட்ஸ்மேன்களான கிர்க் மெக்கென்சி, அலிக் அத்தானாஸ் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சில் 15 வருட அனுபவத்துடன் 261 விக்கெட்கள் வீழ்த்தியுள்ள கெமர் ரோச், 164 விக்கெட்கள் வீழ்த்திய ஷனான் கேப்ரியல், ஆல்ரவுண்டர் ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர்.

அணிகள் விவரம் :

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்),ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்ய ரஹானே, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், அக்சர் படேல், மொகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

மேற்கு இந்தியத் தீவுகள்: கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், ஜோஸ்வா டி சில்வா, அலிக்அத்தானாஸ், டேக்நரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, ரஹ்கீம் கார்ன்வால், ஷனான் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.

அஸ்வினும் மே.இ.தீவுகளும்.. :

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். அந்த அணிக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ள அஸ்வின் 60 விக்கெட்களை வேட்டையாடி உள்ளார். பேட்டிங்கைபொறுத்தவரையில் 4 சதங்களும் விளாசி உள்ளார்.

நேரம்: இரவு 7.30

நேரலை: டிடி ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x