

மிர்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.
வங்கதேசத்தின் மிர்பூர் நகரில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாலி வர்மா 19, அமன்ஜோத் கவுர் 14, ஸ்மிருதி மந்தனா 13, யாஷ்டிகா பாட்டியா 11, தீப்தி சர்மா 10 ரன்கள் சேர்த்தனர்.
96 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. ஷமிமா சுல்தானா 5, ஷாதி ராணி 5, முர்ஷிதா கதுன் 4, ரிது மோனி 4, ஷோர்னா அக்தர் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவையாக இருந்தது. 19-வது ஓவரை வீசிய தீப்தி சர்மா 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த நிலையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் நிகர் சுல்தானாவை (38) வெளியேற்றினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவையாக இருந்தன. ஷபாலி வர்மா வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் 2-வது ரன் ஓடும் முயற்சியில் ரபேயா கான் (0) ரன் அவுட் ஆனார். அடுத்த பந்தில் நகிதா அக்தர் (6) ஆட்டமிழந்தார். 3-வது பந்தில் ரன் சேர்க்கப்படாத நிலையில் 4-வது பந்தில் பஹிமா கதுன் (0) வெளியேறினார். 5-வது பந்தை டாட் பாலாக வீசிய ஷபாலி வர்மா கடைசி பந்தில் முர்பா அக்தரை (0) வெளியேற்ற 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. அந்த அணி கடைசி 5 விக்கெட்களை ஒரு ரன்னுக்கு கொத்தாக தாரைவார்த்தது.
இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா, ஷபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. கடைசி மற்றும் 3-வது ஆட்டம் நாளை (13-ம் தேதி) நடைபெறுகிறது.