

பாங்காக்: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆசிய தடகளசாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவில் இருந்து54 வீரர், வீராங்கனைகள் கொண்டஅணி கலந்து கொள்கிறது. ஊக்க மருந்து சர்ச்சை காரணமாக குண்டுஎறிதல் வீரர் கரண்வீர் சிங், 400 மீட்டர் ஓட்ட பந்தய வீராங்கனை அஞ்சலி தேவி ஆகியோர் பங்குபெறவில்லை. தொடர் ஓட்ட பந்தய வீரரான முகமது அனாஸும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர், விலகியதற்கான காரணத்தை இந்திய தடகள சம்மேளனம் தெரிவிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க பதக்கம்வெல்ல வாய்ப்புள்ள வீரர்களாக கருதப்படும் நீளம் தாண்டுதல் வீரரான ஜெஸ்வின் ஆல்ட்ரின், டிரிப்பிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஈட்டி எறிதல் வீரர் ரோஹித்யாதவ் ஆகியோர் காயம் காரணமாக ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை. ஜெஸ்வின் ஆல்ட்ரின் களமிறங்காத நிலையில் முரளி சங்கர் மீதுஎதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த சீசனில் உலக தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள சங்கர் கடந்த மாதம் இரு முறை 8.81 மீட்டர் நீளம் தாண்டினார். மேலும் சமீபத்தில் பாரீஸில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 3-வது இடம் பிடித்திருந்தார்.
தஜிந்தர்பால் சிங்: ஆடவர் குண்டு எறிதலில் நடப்பு சாம்பியனான தஜிந்தர்பால்சிங் பதக்கத்தை தக்கவைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சாம்பியன்ஷிப்பில் தஜிந்தர்பால் சிங்21.77 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ரோஹித் யாதவ் களமிறங்காத நிலையில் டி.பி.மானு மீது எதிர்பார்ப்பு உள்ளது. ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா வரும் ஆகஸ்ட் மாதம் புடாபெஸ்டில் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வருவதால் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்துகொள்ளவில்லை. டிரிப்பிள் ஜம்ப்பில் அப்துல்லா அபுபக்கர், டெகத்லானில் தேஜஸ்வின் சங்கர்ஆகியோர் பதக்கம் வெல்லக்கூடியவர்களாக திகழ்கின்றனர்.
ஜோதி யார்ராஜி: மகளிர் பிரிவில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசியசாதனையை தன் வசம் வைத்துள்ள ஜோதி யார்ராஜி இந்த சீசனில் 12.84 விநாடிகளில் இலக்கை அடைந்திருந்தார். 200 மீட்டர் ஓட்டத்தில் அவர், பங்கேற்கிறார். மகளிருக்கான நீளம்தாண்டுதலில் இந்தியா 2 பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது.
இந்த சீசனில் ஷாய்லி சிங் 6.76 மீட்டர் தூரம், அன்சி சோஜன் 6.56 மீட்டர் தூரம் தாண்டி இருந்தனர். ஈட்டி எறிதலில் காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற அன்னு ராணி, ஹெப்டத்லானில் ஸவப்னா பர்மான், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபில்சேஸில் பாருல் சவுத்ரி ஆகியோரும் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று 5-வது இடம் பிடித்திருந்தது.