

மும்பை: கடந்த முறை இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசம் பயணித்த போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. ஆனால், ஆப்கானிஸ்கான் அதே வங்கதேசத்தை வீழ்த்தியது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வங்கதேச அணியை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. தொடரின் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. முதல் போட்டியில் டிஎல்எஸ் முறையிலும், அடுத்த போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்திலும் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்நிலையில், இது குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ளார்.
“ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் ஆப்கன் வீழ்த்தியுள்ளது. இதே வங்கதேச அணியிடம் தான் கடந்த முறை நாம் தொடரை இழந்தோம். அந்த தொடரில் ரோகித் காயமடைந்தார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. கடைசிப் போட்டியில் இஷான் கிஷன், வங்கதேச பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக பந்து வீசி வருகின்றனர். பேட்டிங்கும் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோரால் அபாரமாக உள்ளது. இந்தியாவில் வரும் உலகக் கோப்பை தொடரிலும் இதே ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் தொடர வாய்ப்பு உள்ளது. அங்குள்ள சூழல் தான் இங்கும் இருக்கும்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.