

ஹராரே: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்றின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 128 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது இலங்கை அணி.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வந்தன. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இலங்கை, நெதர்லாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. இதன் மூலம் இந்த இரு அணிகளும் இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ல் தொடங்க உள்ள உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில் தகுதி சுற்று தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று ஹராரே நகரில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 47.5 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக சஹான் அராச்சிகே 57, குசால் மெண்டிஸ் 43, ஷாரித் அசலங்கா 36, வனிந்து ஹசரங்கா 29, பதும் நிசங்கா 23 ரன்கள் சேர்த்தனர். நெதர்லாந்து அணி தரப்பில் லோகன் வான் பீக், ரியான் லீன், விக்ரம்ஜித் சிங், ஷாகிப் சுல்பிகர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
234 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணியானது 23.3 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேக்ஸ் ஓ'டவுட் 33, லோகன் வான் பீக் 20, விக்ரம்ஜித் சிங் 13 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இலங்கை அணி தரப்பில் தீக் ஷனா 4, தில்ஷான் மதுசங்கா 3, வனிந்து ஹசரங்கா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 128 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி தகுதி சுற்று தொடருக்கான கோப்பையை கைப்பற்றியது.