

சென்னை: கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார்.
அந்த போட்டி தோனியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் மிகுந்த வலியை தந்தது. ஆனாலும் அது ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாத தோனியின் இன்னிங்ஸ்களில் ஒன்று. கடந்த 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டி.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. மழை காரணமாக இந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இருந்தாலும் 92 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா உடன் இணைந்து 116 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் தோனி. கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றி கோட்டிற்கு அருகில் சென்று தோல்வியை தழுவியது.
தோனி, 72 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அவரது பேட்டுக்கும், கிரீஸுக்குமான இடைவெளி வெறும் சில சென்டி மீட்டர் தூரம் தான். இருந்தும் அன்றைய தினம் தோனியால் அதை அவரால் கடக்க முடியவில்லை. அந்த தருணம் பல்லாயிர கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை தகர்த்தது. நிச்சயம் அதுதான் தோனி விளையாடும் கடைசி சர்வதேச போட்டி என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட் கேரியரை ரன் அவுட்டில் தொடங்கி, அதிலேயே முடித்திருந்தார்.
சர்வதேச அளவில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 538 போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். அதன் மூலம் 17,266 ரன்கள் எடுத்துள்ளார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியை அவர் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.