

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னை வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, தனது சினிமா தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ மூலமாக திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தமிழில் ‘எல்ஜிஎம்’ (Let’s Get Married) என்ற படத்தை தோனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இது இந்நிறுவனம் தயாரித்துள்ள முதல் திரைப்படம்.
இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. அதற்காக தோனி தற்போது சென்னை வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சாக்ஷி தோனியும் வந்துள்ளார்.
ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மைக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். நடிகை நதியா, நடிகர் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசை அமைத்துள்ளார்.