Published : 09 Jul 2023 06:34 AM
Last Updated : 09 Jul 2023 06:34 AM
டொமினிகா: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்துக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அலிக் அதானாஸ், கிர்க் மெக்கென்சி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 12ம் தேதி டொமினிகாவில் தொடங்குகிறது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
இதில் இடது கை பேட்ஸ்மேன்களான அலிக் அதானாஸ், கிர்க் மெக்கென்சி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடி உள்ளனர். சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் ‘ஏ’ அணியில் அலிக் அதானாஸ், கிர்க் மெக்கென்சி ஆகியோர் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர்.
கார்ன்வால்: இதனால் அவர்களுக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆல்ரவுண்டர் ரஹ்கீம் கார்ன்வால் அணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். கார்ன்வால் கடைசியாக 2021-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அவருடன் சுழற்பந்து வீச்சாளராக ஜோமெல் வாரிகன் இடம் பெற்றுள்ளார்.
அணி விவரம்: கிரெய்க் பிராத்வெயிட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேக்நரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டி சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, ரேமன் ரெய்ஃபர், கெமர் ரோச், ஜோமெல் வாரிகன்.
மாற்று வீரர்கள்: டெவின் இம்லாச், அகீம் ஜோர்டன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT