

ஜாக்ரெப்: கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சூப்பர் யுனைடெட் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் 2023 செஸ் போட்டிகள் குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது.
கிராண்ட் செஸ் டூரின் 3-வது கட்ட போட்டி குரோஷியாவில் உள்ள ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவு கொண்ட இந்தத் தொடரின் 3-வது நாளான நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 8-வது சுற்றில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை எதிர்கொண்டார். இதில் 17 வயதான குகேஷ், 40-வது காய் நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிராக மோதிய முதல் ஆட்டத்திலேயே வெற்றி கண்டுள்ளார் குகேஷ்.
இதுகுறித்து அவர், கூறும்போது, “இது முக்கியமான வெற்றி, மகிழ்ச்சியாக உள்ளது. விஸ்வநாதன் ஆனந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடி வருகிறேன் என்று நினைத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர், மிக எளிதாக சமன் செய்தார். பின்னர், அவர் ஒரு தவறை செய்தார். அந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு வருவது கடினமாக இருந்தது” என்றார்.
ரேபிட் பிரிவு முடிவில் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் ஆகியோர் தலா 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளனர். முதல் இரு நாட்களும் முதலிடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த், இறுதி சுற்றுகளில் பின்னடைவை சந்தித்தார். குகேஷிடம் தோல்வி அடைந்த நிலையில் போலந்தின் ஜான்-கிரிஸ்டோஃப் டுடா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகியோருக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தார்.
அதேவேளையில் குகேஷ், அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவிடம் தோல்வி அடைந்தார். ஜான்-கிரிஸ்டோஃப் டுடாவுக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார். ஃபேபியானோ கருனா, இயன் நெபோம்னியாச்சி ஆகியோர் தலா 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 3-வது இடம் வகிக்கிறார். ரேபிட் பிரிவில் போட்டிகள் முடிந்த நிலையில் 18 சுற்றுகள் கொண்ட பிளிட்ஸ் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளன.