

வேண்டுமென்றே கீழே விழுந்ததற்காக நெதர்லாந்து வீரர் அர்ஜென் ரூபென் வருத்தம் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தன்னை மெக்ஸிகோ வீரர்கள் தடுத்ததற்காக பெனால்டி கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது சரியான முடிவுதான் என்று அவர் கூறியுள்ளார்.
மெக்ஸிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜென் ரூபென் வேண்டுமென்றே கீழே விழுந்து நாடகமாடி பெனால்டி கிக் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் நெதர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் நெதர்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் அர்ஜென் ரூபென் கூறியது: கீழே விழுந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் நிச்சயமாக அவ்வாறு செய்திருக்கக் கூடாது. அனைவருமே சில நேரங்களில் இதுபோன்று முட்டாள்தனமாக நடந்து கொள்வது உண்டு. நாம் தடுக்கப்பட்டு விடுவோம் என்ற எண்ணத்தில் அப்போது செயல்பட்டேன். ஆனால் மெக்ஸிகோ வீரர் தனது காலை உடனேயே எடுத்து விட்டார். எனினும் எங்கள் அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு அளிக்கப்பட்டது சரியான முடிவுதான் என்று ரூபென் கூறியுள்ளார்.
நடுவர் மீது மெக்ஸிகோ பயிற்சியாளர் குற்றச்சாட்டு
கூடுதல் நேரத்தின்போது தவறான பெனால்டி கிக் வாய்ப்பு கொடுத்த நடுவர் பெட்ரோ புரோயென்ஸ்காவை மெக்ஸிகோ அணி பயிற்சியாளர் மிகெல் ஹெர்ரீரா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
உலகக் கோப்பை போட்டியில் இனி வரும் ஆட்டங்களில் பெட்ரோவை நடுவராக நியமிக்கக் கூடாது. ஒரு போட்டியில் நடுவர் என்பவர்தான் முக்கியமான விஷயங்களை தீர்மானிப்பவராக இருக்கிறார். அவர் தவறு செய்யும்போது முடிவே தலைகீழாக மாறிவிடுகிறது. இப்போது நாங்கள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற நடுவரின் தவறான முடிவே காரணம்.
எங்கள் அணிக்கு எதிராக தவறான பெனால்டியை கொடுத்து நடுவர் மோசம் செய்து விட்டார். எனவே நாங்கள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிட்டதைப் போல அவரையும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
உண்மையில் நாங்கள் தோல்வியடைந்த அணி அல்ல. நடுவரின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட அணி என்று மிகெல் கூறினார்.