மகிழ்ச்சி... விரைவில் களம் காண்கிறார் ரிஷப் பண்ட்!

மகிழ்ச்சி... விரைவில் களம் காண்கிறார் ரிஷப் பண்ட்!
Updated on
2 min read

கார் விபத்தில் படுகாயங்களோடு உயிர் தப்பிய இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நன்றாக உடல் நிலை தேறி வருவதாகவும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்திய அணிக்குத் திரும்புகிறார் என்றும் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷியாம் சர்மா, ரிஷப் பண்ட்டை சந்தித்தப் பிறகு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான நற்செய்தி தெரிவித்துள்ளார்.

டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் ஷியாம் சர்மா, ஹரீஷ் சிங்லா ஆகியோர் இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட்டை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று சந்தித்தனர். பெங்களூரு என்.சி.ஏ.வில்தான் ரிஷப் பண்ட் தற்போது மறு சீரமைப்பு சிகிச்சையில் இருந்து வருகிறார். ரிஷப் பண்ட் கூட தன் சமூக ஊடகப்பக்கங்களில் பதிவிடுவதன் மூலம் தான் எப்படி குணமாகி வருகிறேன் என்பதை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

எந்த வித ஊன்றுகோலும் இல்லாமல் நடக்கிறார். உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்கிறார். அணி வீரர்களுடன் எப்போதும் போல் உற்சாகமாக அளவளாவி வருகிறார் ரிஷப் பண்ட். உளவியல் பாதிப்பு ஏற்படுத்தும் இத்தகைய உயிர் பிழைப்பு விபத்திலிருந்து அவர் தன் மன உறுதியுடன் மீட்டெழுச்சி கண்டு வருகிறார். அவரது செயல்பாடுகளை அருகில் இருந்து பார்த்து வருபவர்கள் விரைவில் ரிஷப் பண்ட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க அணியுடன் இணைவார் என்று செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

டிடிசிஏ தலைவர் ஷியாம் சர்மா, ரிஷப் பண்ட்டைப் பார்த்தது பற்றி கூறும்போது, “உடல்நலம் நன்றாக தேறி வருகிறார். முன்பை விட இப்போது எவ்வளவு மடங்கு தேவலாம். அவர் எப்போது கிரிக்கெட் களத்திற்குத் திரும்புவார் என்பது ஊகங்களுக்குமான விஷயமாக இருந்து வரும் நிலையில் அவர் கூடிய விரைவில் களம் புகுவார் என்று தெரிகிறது” என்றார்.

இவர் ஆடும் அதிரடி வேகத்தைப் பார்த்து இவர் ஒருநாள், டி20க்கான வீரர் என்று நினைக்கையில் விராட் கோலி, ரவிசாஸ்திரி, திராவிட் கூட்டணி டெஸ்ட் போட்டிச் சவாலில் களமிறக்கி அழகு பார்த்தது. அதில் அவர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாகச் செயல்பட்டதோடு, வெளிநாடுகளில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் செல்லும் விக்கெட்-கீப்பர்/பேட்டராக உயர்வு பெற்றார்.

இதுவரை 33 டெஸ்ட் போட்டிகளில் 2271 ரன்களை 43.67 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 5 அதிரடி சதங்களும் மறக்க முடியாதவை. 11 அரைசதங்களும் முக்கியமான கட்டத்தில் இந்தியாவுக்கு வலு சேர்த்தவை. இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில் எடுத்த சதங்களை மறக்க முடியாது என்றால் தென் ஆப்பிரிக்காவில் எடுத்த சதம் அதைவிடவும் பெரிய சதமாகும். மிகவும் பகைத்தனமான பவுலிங்குக்கு எதிராக தன்னந்தனியாக இப்போது பென் ஸ்டோக்ஸ் ஆடுகிறாரே அதே போன்ற ஒரு இன்னின்ஸை சர்வ அலட்சியமாக ஆடி எடுத்த அபூர்வ சதமாகும் அது.

கடைசியாக வங்க தேசத்திற்கு எதிராக மிர்பூரில் ரிஷப் பண்ட் 104 பந்துகளில் 5 சிக்சர்கள் 7 பவுண்டரிகளுடன் எடுத்த 93 ரன்களும், ஸ்ரேயஸ் அய்யர் (87) உடன் கூட்டணி சேர்ந்து எடுத்த 159 ரன்களும் இந்திய அணிக்கு 2-0 என்ற தொடர் வெற்றியைப் பெற்றுத்தந்த நினைவுடன் ரிஷப் பண்ட் எனும் அதிரடி வீரரை ரசிகர்கள் மனதில் நிலைத்து வைத்துள்ளனர். மீண்டும் அவர் வந்தால்தான் இந்திய அணியின் கை ஓங்கும் என்பதையும் அவர் இல்லாதது இந்திய அணிக்கு எப்படிப்பட்ட பின்னடைவை தருகிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து வருகிறார் என்ற செய்தி மிக மிக நற்செய்தியாக இப்போது தொனிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in