

ஸ்ரீகல்கரி: கனடா ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக் ஷயா சென் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கனடாவின் கல்கரி நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக் ஷயா சென், பிரேசிலின் கோயல்ஹோவை எதிர்த்து விளையாடினார். 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். கால் இறுதி சுற்றில் லக் ஷயா சென், பெல்ஜியத்தின் ஜூலியன் கார்ராகியுடன் மோதுகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் நட்சுகி நிடைராவுடன் மோதுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் நட்சுகி நிடைரா காயம் காரணமாக விலகினார். இதனால் சிந்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. கால் இறுதி சுற்றில் சிந்து, சீனாவின் காவோ பாங் ஜியுடன் மோதுகிறார்.