

மும்பை: ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் புதிதாக கொண்டுவரப்பட்ட இம்பேக்ட் பிளேயர் விதியை உள்நாட்டு டி 20 கிரிக்கெட் தொடரான சையது முஸ்டாக் அலி தொடரிலும் அறிமுகம் செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ மத்திய குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் வரும் அக்டோபர் 16ம் தேதி தொடங்கும் சையது முஸ்டாக் அலி டி 20 தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியை ஐபிஎல் தொடரில் செயல்படுத்தியது போன்று பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி டாஸ் போடுவதற்கு முன்னதாக விளையாடும் 11 லெவனுடன் 4 மாற்று வீரர்களின் பெயர்களையும் வழங்க வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு வீரரை இம்பேக்ட் பிளேயர் விதியின் கீழ் பயன்படுத்திக் கொள்ளலாம். கடந்த சீசனிலேயே இந்த விதி, சையது முஸ்டாக் அலி தொடரில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த விதியில் 14 ஓவர்களுக்குள் வீரரை களமிறக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இதில் தற்போது மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிசிசிஐ கூட்டத்தில், வரும் செப்டம்பர்-அக்டோபரில் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணியை அனுப்புவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆடவர் பிரிவில் 2ம் நிலைவீரர்களை உள்ளடக்கிய இந்திய அணியை ஆசிய விளையாட்டு போட்டிக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு உள்ளது. ஏனெனில் அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் ஐசிசி உலகக்கோப்பை தொடங்குகிறது. அதேவேளையில் மகளிர் பிரிவில் இந்திய அணி முழு பலத்துடன் கூடிய பிரதான அணி பங்கேற்கிறது.
ஆசிய விளையாட்டு வரலாற்றில் இதுவரை 3 முறை மட்டுமே கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. கடைசியாக இஞ்சியானில் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. இதில் இந்திய அணி கலந்துகொள்ளவில்லை.