

ஆளூர்: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரில் மத்திய மண்டலத்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல வீரர் சேதேஷ்வர் புஜாரா சதம் விளாசினார்.
ஆந்திர மாநிலம் ஆளுரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் மேற்கு மண்டலம் 220 ரன்களும், மத்திய மண்டலம் 128 ரன்களும் எடுத்தன. 92 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய மேற்கு மண்டல அணி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. சேதேஷ்வர் புஜாரா 50, சர்ஃபராஸ் கான் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சர்ஃபராஸ் கான் மேற்கொண்டு ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஹெட் படேல் 27, அதித் ஷேத் 9, தர்மேந்திர சிங் ஜடேஜா 9, சின்தன் கஜா 4 ரன்களில் வெளியேறினர். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய புஜாரா 278 பந்துகளில், ஒரு சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் சேர்த்து ரன் அவுட் ஆனார். நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் மேற்குமண்டலம் அணி 92 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது.