Published : 07 Jul 2023 01:40 PM
Last Updated : 07 Jul 2023 01:40 PM

HBD Dhoni | பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரெய்னா, ராயுடு, ஜடேஜா, பாண்டியா

தோனி | கோப்புப்படம்

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இன்று பிறந்தநாள். கடந்த 1981-ல் இதே நாளில் அவர் பிறந்தார். அவருக்கு இந்த இனிய நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ராயுடு மற்றும் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, இந்திய டி20 அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தின் வழியே அவர்கள் இதனை பகிர்ந்துள்ளனர்.

சுரேஷ் ரெய்னா: “என் பெரிய அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். களத்தில் இணைந்தது முதல் நமது கனவுகளை பகிர்ந்து கொள்வது வரையில் நமக்குள் இருக்கும் பந்தம் என்றென்றும் பிரிக்க முடியாதது. தலைவராகவும், நண்பராகவும் உங்களது பலமே என்னை வழிநடத்தும் வெளிச்சம். உங்களுக்கு மகிழ்ச்சி, வெற்றி, நல்ல ஆரோக்கியம் தரும் வகையில் இந்த ஆண்டு அமையும். உங்கள் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டே இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

ராயுடு: “ஜாம்பவானாகவும், விளையாட்டின் மிக சிறந்த வீரராகவும் இருப்பவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் தேசத்தில் ஒவ்வொருவருக்கும் உங்கள் தலைமைத்துவத்தை வாழ்வில் ஒரு நாளேனும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கட்டும். தலைசிறந்த தலைவா” என தெரிவித்துள்ளார்.

ஜடேஜா: “2009 முதல் இன்று வரை என் பக்கம் இருக்கும் மனிதர். Mahi (தோனி) பாய்க்கு (அண்ணன்) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சந்திப்போம்” என தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா: “எனது பேவரைட் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர்: "உங்களது ஹெலிகாப்டர் ஷாட் போல எப்போதும் நீங்கள் உயர்ந்து பறக்க வேண்டும். பிறந்தநாள் வாழ்த்துகள், எம்.எஸ்" என தெரிவித்துள்ளார்.

சேவாக்: "சூரியக் கடவுள் தனது ரதத்தை இழுக்க 7 குதிரைகள் வைத்துள்ளார். ரிக்வேதத்தில் உலகின் பகுதிகள் 7, பருவங்கள் 7, கோட்டைகள் 7, ஸ்வரங்களும் 7. உலகின் அதிசயங்கள் 7. 7-வது மாதத்தின் 7-ம் நாள் சிறந்த மனிதனின் பிறந்தநாள்" என தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங்: "பாகுபலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x