

ஸாக்ரெட்: கிராண்ட் செஸ் டூரின் 3-வது கட்ட போட்டி குரோஷியாவில் உள்ள ஸாக்ரெப் நகரில் நடைபெற்று வருகிறது. 10 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 5 புள்ளிகளுடன் முதலிடம் வகித்தார். 5 முறை உலக சாம்பியனான ஆனந்த் தனது முதல் சுற்றில் இளம் வீரரான ஈரானின் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.
தொடர்ந்து நடைபெற்ற அடுத்த இருசுற்றுகளிலும் ருமேனியாவின் கிராண்ட் மாஸ்டர்களான ரிச்சர்ட் ராப்போர்ட், கான்ஸ்டன்டின் லுபுலெஸ்கு ஆகியோரை வீழ்த்தினார் ஆனந்த். முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், போலந்தின் ஜான் கிரிஸ்டோஃப் டுடா, ராப்போர்ட் ஆகியோர் தலா 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.
இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது முதல் ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வி அடைந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் 36வது காய் நகர்த்தலின் போது கார்ல்சன் வெற்றி பெற்றார். ஈரானின் அலிரேசா ஃபிரோஸ்ஜா, ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி ஆகியோருக்கு எதிரான ஆட்டத்தை டிராவில் முடித்தார் குகேஷ். 17 வயதான குகேஷ் 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த் தனது 6-வது சுற்றில் கார்ல்சனையும், 8-வது சுற்றில் குகேஷையும் எதிர்கொள்கிறார்.