

புலவாயோ: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு கடைசி அணியாக நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் மீதம் உள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்காக ஜிம்பாப்வேயில் தகுதி சுற்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் இலங்கை அணி லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும், சூப்பர் 6 சுற்றில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் கடைசி அணியாக தற்போது நெதர்லாந்து தகுதி பெற்றது. புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து 9 விக்கெட்கள் இழப்புக்கு 277 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரண்டன் மெக்முல்லன் 110 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் விளாசினார். கேப்டன் பெரிங்டன் 64 ரன்கள் சேர்த்தார். நெதர்லாந்து அணி தரப்பில் பாஸ் டி லீடி 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
278 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நெதர்லாந்து அணி 42.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாஸ் டி லீடி 92 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு பெரிய அளவிலான பங்களிப்பை வழங்கினார். விக்ரம்ஜித் சிங் 40, சாகிப் சுல்பிகர் 33, ஸ்காட் எட்வர்ட்ஸ் 25 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றியின் மூலம் நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடருக்குள் கடைசி அணியாக நுழைந்துள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு நெதர்லாந்து அணி தகுதி பெறுவது இது 2-வது முறையாகும். கடந்த 2011-ம் ஆண்டும் அந்த அணி உலகக் கோப்பையில் விளையாடி இருந்தது.தகுதி சுற்று தொடரை நடத்திய ஜிம்பாப்வே சூப்பர் 6 சுற்றில் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.