Published : 06 Jul 2023 06:39 AM
Last Updated : 06 Jul 2023 06:39 AM

ஆஷஸ் டெஸ்ட் | 3-வது ஆட்டம் இன்று தொடக்கம்: இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் நீக்கம்

இரு அணி வீரர்கள்

ஹெட்டிங்லி: இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 3-வது ஆட்டம் ஹெட்டிங்லியில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த இரு வெற்றிகளின் மூலம் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 3-வது ஆட்டம் ஹெட்டிங்லியில் இன்று தொடங்குகிறது. இந்த ஆட்டத்துக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதில் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோஷ் டங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 688 விக்கெட்களை வேட்டையாடி அதிக விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள ஆண்டர்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்தமாக 77 ஓவர்களை வீசிய அவர், 3 விக்கெட்கள் மட்டுமே கைப்பற்றினார். அதேவேளையில் ஜோஷ் டங், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்கள் கைப்பற்றி இருந்தார்.இவர்கள் இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் காயம் காரணமாக விலகி உள்ள துணை கேப்டன் ஆலி போப்புக்கு பதிலாக மொயின் அலி அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மொயின் அலி காயம் காரணமாக விளையாடாமல் இருந்தார். பேட்டிங் வரிசையில் ஆலி போப் களமிறங்கிய 3-வது இடத்தில் ஹாரி புரூக் களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரில் 0-2 என பின்தங்கி உள்ளதால் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்ற நெருக்கடியில் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

மறுபுறம் 3-வது போட்டியை டிராவில் முடித்தால் கூட கோப்பையை வெல்வதை ஆஸ்திரேலிய அணி உறுதி செய்துவிடும். அந்த அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக டாட் மர்பி களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x