Published : 06 Jul 2023 07:12 AM
Last Updated : 06 Jul 2023 07:12 AM
திருநெல்வேலி: டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி.
திருநெல்வேலியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டும் என நெருக்கடியுடன் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி களமிறங்கியது. டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சீகம் மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ் லோகேஷ்வர் 37 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹரி நிஷாந்த் 27 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், ஆதித்யா 28 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்தனர். திருப்பூர் தமிழன்ஸ் தரப்பில் திரிலோக் நாக் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
161 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருப்பூர் தமிழன்ஸ் ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. விஷால் வைத்யா 21, ராஜேந்திரன் விவேக் 11, துஷார் ரஹேஜா 51 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 50 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் விஜய் ஷங்கர். அனிருத் சீதா ராம் களத்தில் இருந்தனர். அஜய் கிருஷ்ணா வீசிய 17-வது ஓவரில் விஜய் ஷங்கர் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் விளாச பரபரப்பு அதிகமானது. குர்ஜப்நீத் சிங் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை அனிருத் சீதா ராம் சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டம் திருப்பூர் அணியின் பக்கம் திரும்பியது.
ஆனால் அந்த ஓவரின் 3-வது பந்தில் விஜய் ஷங்கர் (பந்துகள் 22, ரன்கள் 28) ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கடைசி 2 ஓவர்களில் திருப்பூர் அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவையாக இருந்தன. அஜய் கிருஷ்ணா வீசிய 19-வதுஓவரின் முதல் பந்தில் என்.எஸ் சத்ருவேத் (1) ஆட்டமிழந்தார்.
ஆனால் அடுத்து களமிறங்கிய புவனேஷ்வரன் சிக்ஸர் விளாசி அணிக்கு புத்துயிர் கொடுத்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் சேர்க்கப்பட்டன. குர்ஜப்நீத் சிங் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் இரு பந்துகளையும் சிக்ஸர், பவுண்டரிக்கு விரட்டினார் புவனேஷ்வரன். 4-வது பந்தில் அனிருத் சீதா ராமை (11) ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் திருப்பூர் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி இரு பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் திருப்பூர் அணியால் ஒரு ரன் மட்டுமே எடுத்தது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது திருப்பூர் தமிழன்ஸ் அணி. புவனேஷ்வரன் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங், அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி லீக் சுற்றில் 7 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 தோல்விகள் பதிவு செய்து 4-வது இடத்தை பிடித்தது. வரும் 8-ம் தேதி சேலத்தில் நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியானது நெல்லை ராயல் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் சுப்ரநேயன் கூறும்போது, “திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தை நாங்கள் கால் இறுதி போட்டி போன்றே விளையாடினோம். பேட்டிங்கில் லோகேஷ்வர், ஹரி நிஷாந்த் ஜோடி சிறப்பான தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய ஆதித்யாவும் சீராக விளையாடி ரன் குவிப்புக்கு உதவினார். ஸ்வப்னில் சிங், ஜெகதீசன் கவுசிக் ஆகியோரும் தங்களது பங்களிப்பை வழங்கினர்.
இலக்கை துரத்திய திருப்பூர் அணி சிறப்பாகவே பேட்டிங்கை தொடங்கினார்கள். அரை சதம் அடித்த துஷார் ரஹேஜாவை, முருகன் அஸ்வின் சரியான நேரத்தில் ஆட்டமிழக்க செய்து திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அதேபோன்று 19-வது ஓவரை வீசிய அஜய் கிருஷ்ணா 9 ரன்கள் மட்டும் வழங்கி திருப்பூர் அணிக்கு நெருக்கடி கொடுத்தார். இறுதி ஓவரில் தொடக்க பந்துகளில் குர்ஜப்நீத் சிங் ரன்களை வழங்கினாலும் கடைசி இரு பந்துகளையும் அற்புதமாக வீசினார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT