

புதுடெல்லி: இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் தேர்தல் டெல்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா போட்டியிட்டார். இத்தேர்தலில் இந்தியா முழுவதும் உள்ள மாநில கூடைப்பந்து சங்க நிர்வாகிகள் 48 பேர் வாக்களிக்க தகுதியுள்ள நிலையில், 41 பேர் வாக்களித்தனர். இதில் 38 வாக்குகளைப் பெற்று ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதவ் அர்ஜுனா கூறியது: "இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக தமிழகத்தில் இருந்து முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். விளையாட்டு விடுதி மாணவராக தொடங்கி இன்று இந்த உயர்ந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் கூடைப்பந்தாட்டத்தை மேம்படுத்தும் பெரும் பொறுப்பை பெற்றுள்ளதாக உணர்கிறேன்.
மேலும் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தேர்தலை நடத்தாமல் ஒரு சிலர் மட்டுமே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது நீநிமன்றம் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். எனது நிர்வாக தலைமையில், மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்தங்களால், தமிழ்நாடு மாநில கூடைப்பந்து அணிகள் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது. அதுபோல், இந்திய கூடைப்பந்து அணியை உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்.
மேலும், வருங்காலத்தில் "கூடைப்பாந்தாட்ட லீக்" போட்டிகளை நடத்தி இந்திய வீரர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு கூடைப்பாந்தாட்ட வீரர்களையும் இந்திய லீக் போட்டிகளில் விளையாட வைக்க முயற்சிகள் எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.