

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை முன்னாள் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் நேரில் காண வந்த நிலையில், விம்பிள்டன் போட்டிக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபெடரரின் படத்தை பகிர்ந்து ‘THALAIVA’ என குறிப்பிடப்பட்டிருந்தது தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தின் லண்டன் நகரில் கடந்த ஜூன் 3-ம் தேதி தொடங்கியது. ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இரண்டு முறை சாம்பியன் ஆன பிரிட்டன் ஆண்டி முர்ரேவும், சக வீரரான ரயான் பெனிஸ்டலும் மோதினர். இந்த போட்டியை நேரில் காண 8 முறை விம்பிள்டன் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் அவரது மனைவி மிர்காவுடன் வந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாராத்துடன் கோஷமிட்டனர். டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற ரோஜர் முதன் முறையாக விம்பிள்டனுக்கு சிறப்பு விருந்தினராக வந்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் ரோஜர் பெடரர் ரசிகர்களை நோக்கி கைகாட்டும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அதில் ‘THALAIVA’ என கேப்ஷனிடப்பட்டு இருந்ததை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என கமென்ட் செய்து வருகின்றனர்.