Published : 05 Jul 2023 07:34 AM
Last Updated : 05 Jul 2023 07:34 AM
கோவில்பட்டி: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் கூறினார். கோவில்பட்டிக்கு நேற்று வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தற்போதைய நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதற்கு தமிழக வீரர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. விரைவில் வாய்ப்புகள் கிடைக்கும் நிலை உருவாகும். தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி களம் கடுமையாக இருக்கும். ஏனென்றால் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. எப்போதுமே நியூஸிலாந்து அணி அரை இறுதி ஆட்டம் வரை முன்னேறி தனது திறமையை நிரூபித்து வருகிறது. இந்திய அணியும் உலகக்கோப்பை உள்ளிட்ட அனைத்து தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். வெற்றி பெற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இரண்டு அணிகளுக்குமே இருக்கும். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த ஆட்டக்காரரை கேப்டனாக நியமிப்பதில் தவறில்லை. துணை கேப்டன் நியமனத்திலும் கவனம் இருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்து வரும் போட்டிகளுக்கு இது பாடமாக அமையும்.
இப்போதுள்ள ஊடக வெளிச்சத்தில் டிஎன்பிஎல் போன்ற தொடரில்வீரர்கள் சிறப்பாக விளையாடினாலே அவர்களை உயர்ந்த இடத்துக்கு கொண்டு போய்ச் சேர்த்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT