Published : 05 Jul 2023 08:22 AM
Last Updated : 05 Jul 2023 08:22 AM

விம்பிள்டன் டென்னிஸ் | சோபியாவிடம் வீழ்ந்த கோ கோ காஃப்

களத்தில் பலப்பரீட்சை செய்த சோபியா மற்றும் கோ கோ காஃப்

லண்டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் புகழ்மிக்க விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடக்க நாள் போட்டியே இந்த தொடரின் பாரம்பரியத்தையும், மரபையும் பறைசாற்றுவதாக இருந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத்தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோ கோ காஃப், சக நாட்டைச் சேர்ந்த, சோபியா கெனினுடன் மோதிய ஆட்டம் சுவாரஸ்யமாக இருந்தது.

வழக்கமாக கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் இருந்துதான் கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். பேஸ் லைன் ஆட்டம், வலைக்கு அருகே வந்து விளையாடுவது, லாங் ரேலிகள், கண்ணை பறிக்கும் ஏஸ்கள் என அதகளப்படும். இவற்றில் பெரும்பாலானவற்றை கோ கோ காஃப்–சோபியா கெனின் மோதிய ஆட்டத்திலேயே காண முடிந்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில்தான் போட்டி முடிவடைந்தது.

3 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் கோகோ காஃப் 4-6, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். 123 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 128-ம் நிலை வீராங்கனையான சோபியாவிடம் வீழ்ந்தார் கோ கோகாஃப். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு 15 வயது இளம் புயலாக விம்பிள்டன் அரங்கிற்குள் நுழைந்த கோ கோ காஃப், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சகநாட்டைச் சேர்ந்த சீனியர் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை முதல் சுற்றிலேயே தோற்கடித்து தனது வருகையை டென்னிஸ் உலகிற்கு அழுத்தமாக பதிவு செய்தார்.

அந்த தொடரில் அவர், கால் இறுதிக்கு முந்தைய சுற்று வரை பயணித்தார். அதன் பின்னர் சீராக முன்னேற்றம் கண்ட கோ கோ காஃப் இம்முறை பட்டம் வெல்லக்கூடிய வீராங்கனைகளில் ஒருவராக இருக்கக்கூடும் என டென்னிஸ் ஆர்வலர்களால் கருதப்பட்டு வந்தது. ஆனால் அவர், முதல் சுற்றிலேயே வீழ்ந்து வெளியேறி உள்ளார். இது டென்னிஸ் களத்தில் எதற்கும் உத்தரவாதம் இல்லை என்பதையே காட்டி உள்ளது.

தோல்விக்குப் பின்னர் கோ கோ காஃப் கூறும்போது, “இப்போது, நான் மிகவும் விரக்தியாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறேன். இந்த தோல்வி என்னை இன்னும் கடினமாக உழைக்க தூண்டுகிறது. நான் கடினமாக உழைத்ததாக உணர்ந்தேன். ஆனால் இந்த தோல்வி அதுபோதாது என தெளிவு படுத்தி உள்ளது. எனது ஆட்டத்தை எங்கு மேம்படுத்த வேண்டும், அதற்கான பயிற்சிகளை எவ்வாறு செய்வது என்று பார்க்க வேண்டும்” என்றார்.

மறுபுறம் 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற சோபியா கெனின், இம்முறை விம்பிள்டனில் தகுதி சுற்றில் விளையாடியே பிரதான சுற்றில் நுழைந்திருந்தார். 2020-ம் ஆண்டு மார்ச்சில் வெளியான டென்னிஸ் தரவரிசை பட்டியலில் சோபியா கெனின் 4-வது இடம் பிடித்திருந்தார். அதே ஆண்டில் அவர், பிரெஞ்சு ஓபனில் இறுதிப் போட்டி வரை சென்றிருந்தார்.

ஆனால் கணுக்கால் காயங்கள், பயிற்சியில் ஏற்பட்ட தடங்கல் ஆகியவை சோபியாகெனினின் டென்னிஸ் வாழ்க்கை முன்னேற்றத்தை தடம் புரளச் செய்தது. இதனால் ஒரு கட்டத்தில் தரவரிசையில் அவர், 400 இடங்களுக்கு மேல் சென்றார். எனினும் படிப்படியாக அங்கிருந்து முன்னேறி வந்தார்.

கோ கோ காஃபிற்கு எதிரான ஆட்டத்தில் புத்தெழுச்சியுடன் விளையாடினார் சோபியா கெனின். ட்ராப் ஷாட்கள், கோணங்கள் மற்றும் ஆக்ரோஷமான திருப்புதல்கள் ஆகியவற்றின் மூலம் கோ கோ காஃபை களத்தில் செட்டில் ஆகவிடவில்லை. இறுதி செட்டின் நான்காவது ஆட்டத்தில் சோபியா கெனின் பெரும்அழுத்தத்தின் கீழ் சர்வீஸை வைத்திருந்தார். அதை அவர், சரியாக செய்து முடித்ததுமே வெற்றிக்கு தான்,தகுதியானவர் என்பதை நிரூபித்தார்.

அல்கராஸ் வெற்றி… விம்பிள்டன் தொடரின் 2-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 49-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸை தோற்கடித்தார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-0,6-2, 6-5 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ஜெர்மி ஷார்டியை தோற்கடித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x