FIFA மகளிர் உலகக் கோப்பை: சுவிட்சர்லாந்து அணியில் இடம் பிடித்த 16 வயது வீராங்கனை

பெனி (படத்தில் இடது பக்கம் இருப்பவர்)
பெனி (படத்தில் இடது பக்கம் இருப்பவர்)
Updated on
1 min read

சிட்னி: எதிர்வரும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான சுவிட்சர்லாந்து அணியில் 16 வயதான இமான் பெனி இடம் பிடித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 30) அன்று தான் தேசிய அணிக்காக அவர் தனது முதல் போட்டியில் விளையாடி இருந்தார். இந்த சூழலில் நேரடியாக உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தொழில்முறை கால்பந்தாட்ட கிளப் அணியான யங் பாய்ஸ் அணிக்காக பெனி விளையாடி வருகிறார். மிட்-ஃபீல்டர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜாம்பியா அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது பாதியில் மாற்று வீராங்கனையாக களம் கண்டார். இந்தப் போட்டி 3-3 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

கடந்த 2015-க்கு பிறகு இரண்டாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் சுவிட்சர்லாந்து மகளிர் கால்பந்து அணி பங்கேற்கிறது. 2015ல் ரவுண்ட் ஆப் 16 சுற்று வரை முன்னேறி இருந்தது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ-வில் அந்த அணி இடம் பிடித்துள்ளது. வரும் 21-ம் தேதி பிலிப்பைன்ஸ் அணியை சுவிட்சர்லாந்து எதிர்கொள்கிறது.

“உலகக் கோப்பையில் நிச்சயம் அவர் முத்திரை பதிப்பார்” என பெனி குறித்து சுவிட்சர்லாந்து பயிற்சியாளர் இன்கா கிரிங்ஸ் தெரிவித்துள்ளார். அந்த அணியில் இடம் பிடித்துள்ள 23 வீராங்கனைகளில் ஐந்து பேர் தேசிய அணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி உள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் நடைபெறும் பிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023 தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. வரும் 20-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 20 வரை நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in