

லண்டன்: ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன், வலது கால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகி உள்ளார்.
36 வயதான நேதன் லயன், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் களமிறங்கியதன் மூலம் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் பீல்டிங்கின் போது நேதன் லயனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர், பீல்டிங் செய்ய மீண்டும் களமிறங்கவில்லை. எனினும் பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸில் அணியின் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு காலில் கட்டுப்போட்டிருந்தபடி பேட் செய்தார். கடைசி விக்கெட்டுக்கு 15 ரன்கள் சேர்க்க அவர், உதவி செய்திருந்தார். தொடர்ந்து கடைசி இன்னிங்ஸில் நேதன் லயன் பீல்டிங்கில் களமிறங்கவில்லை. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக ஆஷஸ் தொடரின் எஞ்சிய 3 ஆட்டங்களிலும் இருந்து நேதன் லயன் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக எந்த வீரரும் அணியில் புதிதாக சேர்க்கப்படவில்லை. 3-வது டெஸ்ட் போட்டியில் அவரது இடத்தை டாட் மர்பி நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 வயதான டாட் மர்பி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய சுற்றுப்பயணத்தில் அறிமுக வீரராக விளையாடி இருந்தார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் மர்பி 14 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார்.