Last Updated : 04 Jul, 2023 08:47 AM

 

Published : 04 Jul 2023 08:47 AM
Last Updated : 04 Jul 2023 08:47 AM

கபடி பாதி, கோ-கோ மீதி கலந்த ‘அட்யா பட்யா’

‘அட்யா பட்யா’ என்ற விளையாட்டு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டின் பெயரே நம்மில் பலருக்கும் இது என்னய்யா… விளையாட்டு, இப்படி ஒரு விளையாட்டு இருக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது. இத்தனைக்கும் இந்த விளையாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெற்காசிய அட்யா பட்யா போட்டியில் 7 முறை தங்கப் பதக்கம் வென்று குவித்துள்ளது. அட்யா பட்யா என்பது சோழர் காலத்தில் தோன்றிய விளையாட்டாக கூறப்பட்டு வருகிறது. இதில் இருந்து பிரிந்ததே கபடி, கோ-கோ என்ற கருத்தும் உலா வருகிறது.

1982-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் ஜிம்கானா விளையாட்டு சங்கம் சார்பில் எஸ்டபிள்யூ தாபே என்பவரால் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் இந்தியா முழுவதும் அட்யா பட்யா என்ற பெயரில் விளையாடப்பட்டது. 1982-ம் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மட்டுமே கலந்துகொண்டன. அதன் பின்னர் இந்த விளையாட்டு மற்ற மாநிலங்களுக்கு முன்னெடுத்துச் செல்லப்பட்டது. தமிழகத்தில் 1996-ம் ஆண்டு முதல் இந்த விளையாட்டு விளையாடப்பட்டு வருகிறது.

அட்யா பட்யா விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் விளையாடக்கூடியது. இது உள்நாட்டு விளையாட்டு. மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இந்த விளையாட்டை அங்கீகரித்துள்ளது. இந்திய அட்யா பட்யா சங்கம், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அனுமதியின் கீழ் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறது. தெற்காசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் கலந்து கொள்கின்றன.

இதுவரை 7 முறை அட்யா பட்யா தெற்காசிய போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அனைத்திலும் தங்கம் வென்று இந்தியா ஆதிக்கம் செலுத்தி உள்ளது. 7 முறையும் இந்தியா ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் அட்யா பட்யா விளையாட்டு மூலம் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்னர் மருத்துவ படிப்பிலும் 2 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. 2019-ம் ஆண்டு மத்திய அரசின் தபால் துறையில் வேலை வாய்ப்பில் விளையாட்டு ஒதுக்கீட்டில் அட்யா பட்யா விளையாட்டு இடம்பெற்றிருந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் விண்ணப்பித்தார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்தது. இதன் மூலம் முதன்முறையாக விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது. அந்த நேரத்தில் விளையாட்டு ஒதுக்கீடுக்கு என 183 பணியிடங்கள் இருந்தது. இதில் 65 இடங்கள் அட்யா பட்யாவுக்கு வழங்கப்பட்டிருந்தன.

பிற மாநிலங்களிலும் அட்யா பட்யா விளையாட்டுக்கு அரசு துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் கேரளா, மகாராஷ்டிராவில் தமிழக வீரர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தமிழக அட்யா பட்யா விளையாட்டு சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.

இதை பரிசீலித்து கடந்த 7.6.2023 அன்றுதமிழக அட்யா பட்யா சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கி தமிழக விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்த விளையாட்டுதமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக கொண்டு செல்வதற்கான வழி பிறந்துள்ளது.இதுஒருபுறம் இருக்க 36-வது தேசிய சீனியர் அட்யா பட்யா போட்டியை நடத்தும் வாய்ப்பு தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 3மாதங்களுக்குள் இந்த போட்டியை சென்னையில் சிறப்பாக நடத்த தமிழக அட்யா பட்யா சங்கம் நடவடிக்கை மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.

எப்படி விளையாடுவது?

கோ கோ போட்டிக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளத்தை போன்றே அட்டயா பட்டயா ஆடுகளம்தோற்றம் அளிக்கும். அதில் 9 வீரர்கள் அமர்ந்துகொண்டு விளையாடுவார்கள். அட்யா பட்யாவிளையாட்டில் 9 வீரர்கள் நின்று கொண்டு இருப்பார்கள். ஆனால் இதை வீரர்கள் ஏதேனும்ஒரு புறம் பார்த்தபடியே விளையாடுவார்கள். இந்த விளையாட்டை விளையாடுவதற்கு மொத்தம் 12 வீரர்கள் தேவை. 9 பேர் பிரதான வீரர்களாக இருப்பார்கள். 3 பேர் மாற்று வீரர்களாக இருப்பார்கள்.

போட்டியை இரு வகையாக பிரிப்பார்கள். ஒன்று ரெய்டு செல்வது, மற்றொரு தற்காப்பு (பிடிப்பது) ஆட்டம். முதலில் ரெய்டு செல்வதற்காக 5 வீரர்கள் வருவார்கள். இவர்கள் ஆட்டமிழந்தால் அடுத்ததாக 4 வீரர்கள் களிமறங்குவார்கள்.

ஒரு இன்னிங்ஸ் 7 நிமிடங்கள் நடைபெறும். இதில் ரெய்டு செல்பவர்கள் எத்தனை புள்ளிகளை எடுக்கிறார்களோ அதை அவர்கள், டிபன்ஸ் விளையாடும் போது எதிரணியை எடுக்க விடாமல் தக்க வைக்க போராட வேண்டும். எதிரணியினர் அவர்களை விட ஒரு புள்ளி கூடுதலாக எடுத்து வெற்றி பெற வேண்டும். மொத்தம் 3 செட் நடைபெறும். இதில் 2 செட்டை கைப்பற்றுபவர்கள் வெற்றி பெறுவார்கள். தெற்காசிய அட்யா, பட்யா போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்தசர்வேஷ்வரன், சிவசுப்ரமணியன், லோகேஷ் குமார், கோகுல், ஹரிபிரசாத் ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர்.

சிவசுப்பிரமணியன்

பயிற்சியில் 5 ஆயிரம் வீரர்கள்

தமிழ்நாடு அட்யா பட்யா சங்கத்தின் பொதுசெயலாளர் ந.சிவசுப்பிரமணியன் கூறும்போது,“1999-ல் இருந்து விளையாடி அட்யா பட்யா விளையாடி வருகிறேன். 23 வருடங்கள் இந்த விளையாட்டில் உள்ளேன். தெற்காசிய போட்டியில் விளையாடி இந்திய அணிக்காக 2 முறைதங்கம் வென்றுள்ளேன். இந்திய அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளேன். 20 முறை தேசிய போட்டியில் விளையாடி உள்ளேன்.

தமிழகத்தில் இதுவரை 25 மாவட்டங்களில் அட்யா பட்யா விளையாட்டு சங்கம் உள்ளது. கடைசியாக ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் 18 அணிகள் கலந்துகொண்டன. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வீரர்கள் அட்யா பட்யா விளையாட்டில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அனைத்து பள்ளிகளுக்கும் அட்யா பட்யா விளையாட்டை கொண்டு செல்வதற்காக இந்தியபள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பை அணுகஉள்ளோம். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் உள்ள சங்கங்கள் அந்தந்த அரசின்விளையாட்டுத் துறையிடம் அங்கீகார கடிதம் பெற வேண்டும். இதை பெற்ற பின்னர் இந்தியபள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பிடம் விண்ணப்பிப்போம். அங்கு அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் அனைத்து பள்ளிகளிலும் அட்யா பட்யா போட்டியை எளிதாக விளையாடுவதற்கான வழிவகைகள் பிறக்கும்” என்றார்.

வெளிநாடுகளிலும்...

கிளித்தட்டு என்ற பெயரில் கனடா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்கள் அட்யா பட்யா விளையாட்டை விளையாடி வருகின்றனர். இலங்கையில் தமிழர்களின் தேசிய விளையாட்டாகவும் இது இருந்து வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x