

லண்டன்: நடப்பு ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையானது. இந்நிலையில், அதற்கு ஆஸ்திரேலிய அணி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஸ்ட்ரைக்கில் இருந்த பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது. இந்த சூழலில் ஜெஃப்ரி பாய்காட் இதனை தெரிவித்துள்ளார்.
“கிரிக்கெட் நியாயமான முறையில் விளையாடப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். களத்தில் மன்கட் சூழல் என்பது வேறு. ஆனால், பேர்ஸ்டோ அந்த நேரத்தில் நிச்சயம் ரன் எடுக்க முயலவில்லை. அது போன்ற சூழலில் அப்படி செய்வதற்கு முன்பாக கொஞ்சமாவது யோசனை இருந்திருக்க வேண்டும்.
நாம் அனைவரும் தவறு செய்வோம். ஆனால், அதை உணர்வது அவசியம். ஆஸ்திரேலிய அணியினர் தாங்கள் செய்ததை எண்ணி பார்க்க வேண்டும். அதோடு மன்னிப்பும் கோர வேண்டும். அது தான் இதனை சரி செய்யும். அதோடு இதிலிருந்து கடந்து செல்லவும் முடியும்” என பாய்காட் தெரிவித்துள்ளார்.