தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை: தோனி ஒப்புதல்

தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை: தோனி ஒப்புதல்
Updated on
1 min read

3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த பிறகு தோனி கூறும்போது, ‘தரமான கிரிக்கெட்டை ஆடவில்லை’ என்று கூறியுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார்.

அதாவது அடுத்த போட்டியிலும் இஷாந்த் சர்மா இல்லை என்பதை அவர் அறிவித்துள்ளார்.

தோல்வி குறித்து தோனி கூறும்போது, “தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடினோம். மொயீன் அலி நன்றாகவே வீசினார். ஆனாலும் அவரை நன்றாக வீச அனுமதித்தோம். ஸ்பின்னருக்கு எதிராக பாசிடிவ் அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். அவர் நல்ல திசையில் வீசினார். தொடர்ந்து அவர் பந்துகளை தடுத்தாடிக் கொண்டேயிருந்தால் ஏதாவது ஒரு பந்து திரும்பவே செய்யும். ஏனெனில் பிட்சில் ஓரளவுக்கு அதற்குச் சாதகமான அம்சங்கள் இருந்தது.

சில விக்கெட்டுகள் மென்மையான முறையில் விழுந்தன. பெரிய விக்கெட்டுகள் விழும்போது அது ஆட்டத்தின் போக்கை மாற்றி விடுகிறது. நேற்று அதிக விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் ஆட்டம் வித்தியாசமாக இருந்திருக்கும்.

5வது பவுலரை எப்போதும் பயன்படுத்தியதில்லை. அதனால் பேட்ஸ்மென்களை அதிகப்படுத்தி அதில் ஓரிருவரைப் பந்து வீசச் செய்வது என்று முடிவெடுத்தோம். 5வது பவுலர் இருந்தாலும் 8 அல்லது 10 ஓவர்களே வீச முடிகிறது. எனவேதான் அந்த இடத்தில் தவான், விஜய், ரோகித் ஆகியோரை பந்து வீசச் செய்தோம்.

அதுமட்டுமல்ல 4 பவுலர்களைக் கொண்டு வீசினாலும் வேகப்பந்து வீச்சிற்கு அதிக உதவி இல்லாத இத்தகைய ஆட்டக்களங்களில் பொறுமை அவசியம். லைன் மற்றும் லெந்தில் சீராக இருக்க வேண்டும். எப்போதும் வெளியே பந்தை வீசச் செய்து பேட்ஸ்மெனை ஆடவைத்து தவறு செய்வார் என்று காத்திருப்பது பெரிய சோர்வை ஏற்படுத்துகிறது” என்றார் தோனி.

அடுத்த டெஸ்ட் போட்டியில் மீண்டும் எழுச்சியுற்று வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, “நிச்சயமாக, திறமையை வைத்துப் பார்த்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். மனத்தளவில் எப்படி அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து முடிவுகள் அமையும். அடிக்கக்கூடிய இடத்தில் பந்து விழும்போது தன்னம்பிக்கையுடன் அடித்து ஆடப்போகவேண்டும், அவுட் ஆனால் கவலைப்படக்கூடாது. ஏனெனில் கிரிக்கெட் என்பது என்ன? ரன்கள் மற்றும் விக்கெட்டுகள்தான் அதில் பேசப்படப்போகிறது. விரைவு ரன்களைக் குவிக்கும்போது அதிக நேரம் பிட்சில் தாக்குப் பிடிக்க வேண்டிய அவசியமில்லாமல் போகிறது” என்றார் தோனி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in