Last Updated : 03 Jul, 2023 09:24 AM

2  

Published : 03 Jul 2023 09:24 AM
Last Updated : 03 Jul 2023 09:24 AM

ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்யத்துக்கு... மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீழ்ச்சி

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள்

வா.சங்கர்

ஒரு காலத்தில் கிரிக்கெட் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய அணிகளில் ஒன்று மேற்கிந்தியத் தீவுகள் அணி. பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது அந்த அணி. டெஸ்ட் போட்டிகளிலும், அதைத் தொடர்ந்து விளையாடப்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் சாதனைகளை படைத்து வந்த அணி முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தது. ஆனால் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது அந்த அணி. ராஜ்ஜியத்திலிருந்து பூஜ்யத்துக்கு வந்துள்ள அந்த அணியின் சரிவைக் கண்டு வருத்தப்படாத கிரிக்கெட் ரசிகர்களே இல்லை என்று கூறலாம். வேகப்பந்து வேதாளங்கள் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்களைக் கூறுவர்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசாத்திய சாதனைகள். அதுமட்டுமல்லாமல் 1975, 1979-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி வென்று சாதனை படைத்தது.

இதுவரை ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளில் 6 கோப்பையைக் கைப்பற்றியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 1975, 1979-ல் ஒருநாள் கிரிக்கெட் கோப்பை, 2012, 2016-ல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2004-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, ஐசிசி 19 வயதுக்குட்பட்டோர் கோப்பை என 6 கோப்பைகளைக் கைப்பற்றியுள்ளது அந்த அணி. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சி 3 உலகக்கோப்பை போட்டியின் இறுதிச் சுற்று வரை (1975, 1979, 1983) முன்னேறி சாதனை படைத்தது அந்த அணி. மேலும், இரு முறை உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் படைத்தது. பின்னர் இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடித்தது.

ஆனால் 2023-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிலை தலைகீழாகிவிட்டது. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் அந்த அணி தகுதி பெற்றது. ஆனால் இந்த ஆண்டில் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதானச் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், ஜிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்று சூப்பர் 6 சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வி கண்டு உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளது.

தோல்விக்கான காரணம் குறித்து மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் ஷாய் ஹோப் கூறும்போது “உலகக் கோப்பைப் போட்டி தொடருக்கு தகுதிபெறாமல் வெளியேறியது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதென்றால், யாரையும் நான் விரல் நீட்டி குற்றம் கூற இயலாது. இந்தத் தொடர் முழுவதுமே எங்கள் ஆட்டம் மோசமாகத்தான் இருந்தது.

இதுபோன்ற மிகப்பெரிய தொடருக்கு வருவதற்கு முன் முன்தயாரிப்பு, பயிற்சி மிகவும் முக்கியம். மேற்கிந்தியத் தீவுகள் அணி தங்களின் செயல்பாடுகளை திட்டமிட்டிருப்பது அவசியம்” என்றார்.

கேர்பீல்ட் சோபர்ஸ், லான்ஸ் கிப்ஸ், ஜார்ஜ் ஹெட்லி, பிரையன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், மால்கம் மார்ஷல், ஆல்வின் காளிச்சரண், ஆன்டி ராபர்ட்ஸ், ரோஹன் கன்ஹாய், பிராங்க் வொரல், கிளைட் வால்காட், எவர்டன் வீக்ஸ், கர்ட்லி அம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங், கோட்னி வால்ஷ், ஜோயல் கார்னர், வெஸ் ஹால் போன்ற ஜாம்பவான்களைக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இன்றைய நிலைமை மோசமாக இருக்கிறது.

பூஜ்யத்துக்கு சரிந்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி குறித்து கிரிக்கெட் நிபுணர்கள் கூறும்போது, “மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தில் எழுந்துள்ள ஊதியப் பிரச்சினை, அணி நிர்வாகம் - வீரர்கள் இடையே போதுமான ஒற்றுமை இல்லாதது, ஐசிசி-யில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கு வரும் பங்குத் தொகை போதாமல் இருப்பது போன்ற பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

ஊதியப் பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. டுவைன் பிராவோ, கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸல் ஆகியோர் ஊதியப் பிரச்சினை குறித்து வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினர். இதுதான் அணியின் மோசமான நிலைக்குக் காரணம்" என்று தெரிவித்தனர். இன்று மோசமான நிலையில் இருந்தாலும் அணி விரைவில் மீண்டெழும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கணிக்கின்றனர். அவர்களது கூற்று மெய்யாக வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x