Published : 03 Jul 2023 09:41 AM
Last Updated : 03 Jul 2023 09:41 AM
திருநெல்வேலி: டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வென்றது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திருநெல்வேலி இந்தியன் சிமென்ட் கம்பெனி மைதானத்தில் நேற்று மாலை 3.15 மணிக்கு நடைபெற்றது.
முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷாருக் கான் 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். அணியில் அதிகபட்சமாக பி.சச்சின் 51 பந்துகளில் 67 ரன்களை எடுத்து குர்ஜப்நீத் சிங் பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் சுரேஷ் குமார் 29 பந்துகளில் 64 ரன்களை அதிரடியாகக் குவித்தார். அவர் ஸ்வப்னில் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மதுரை பேந்தர்ஸ் அணி சார்பில் ஸ்வப்னில் சிங், குர்ஜப்நீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.
பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பேந்தர்ஸ் அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் வாஷிங்டன் சுந்தர் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் லோகேஷ்வர் 27 பந்துகளில் அதிரடியாக 41 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த கேப்டன் ஹரி நிஷாந்த் 21 பந்துகளில் 33 ரன்களை விளாசி அவுட்டானார்.
அதைத் தொடர்ந்து விளையாட வந்த ஜெகதீசன் கவுஷிக் 9 ரன்களும், தீபன் லிங்கேஷ் 14 ரன்களும், ஸ்ரீ அபிஷேக் 17 ரன்களும், ஸ்வப்னில் சிங் 10 ரன்களும், கிருஷ் ஜெயின் 11 ரன்களும், பி. சரவணன் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 18 ஓவர்களில் 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் மதுரை பேந்தர்ஸ் அணி இழந்தது. இதையடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி கண்டது.
கோவை அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்களைச் சாய்த்தார். ஷாருக் கான், வள்ளியப்பன் யுதீஸ்வரன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், கவுதம் தாமரைக் கண்ணன், ஜடவேத் சுப்பிரமணியன் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்டநாயகனாக ஷாருக் கான் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT