

புலவாயோ: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று தொடரின் சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இலங்கை அணி. இதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது இலங்கை.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள் தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் இருந்து முதல் அணியாக இலங்கை தகுதி பெற்றுள்ளது.
புலவாயோ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு 103 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் கருணரத்னே மற்றும் நிசாங்கா. கருணரத்னே 30 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த குசல் மென்டிஸ், 25 ரன்கள் எடுத்தார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பதும் நிசாங்கா, 102 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். 33.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது இலங்கை. 101 பந்துகள் எஞ்சியிருக்க அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வரும் 9-ம் தேதி நடைபெறும் தகுதி சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை விளையாடுகிறது.
“தகுதி சுற்றில் விளையாடுவது மிகவும் கடினம். ஆனால் நடைமுறையின் படி நாம் இயங்க வேண்டியது அவசியம். நிச்சயம் எங்கள் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என நினைத்தோம். அது தான் நடந்துள்ளது. இந்த தொடரில் பங்கேற்ற மற்ற அணிகளும் எங்களுக்கு சவால் கொடுத்தன. அடிப்படைகளை சரியாக செய்தோம் என நினைக்கிறேன். உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது பெரிய சாதனை. உலகக் கோப்பை தொடரில் கடந்த காலங்களில் நாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். 1996-ல் சாம்பியன், 2011-ல் இரண்டாம் இடமும் பிடித்துள்ளோம். உலகக் கோப்பை தான் எங்கள் இலக்கு. நிச்சயம் எங்கள் சிறப்பான ஆட்டத்தை அதில் வெளிப்படுத்துவோம்” என இலங்கை அணியின் கேப்டன் ஷனகா இந்த போட்டி முடிந்த பின்னர் தெரிவித்திருந்தார்.