

லாசனே: ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா மதிப்புமிக்க டைமன்ட் லீக் பட்டத்தை தொடர்ச்சியாக 2-வது முறையாக வென்றார்.
சுவிட்சர்லாந்தின் லாசனே நகரில் நேற்று நடைபெற்ற டைமன்ட் லீக் தடகளத்தில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் 87.66 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். 25 வயதான நீரஜ் சோப்ரா கடந்த மே 5-ம் தேதி தோகாவில் நடைபெற்ற டைமன்ட் லீக் தொடரில் 88.67 மீட்டர் தூரம் எறிந்து பட்டம் வென்றிருந்தார்.
தசைப்பிடிப்பு காரணமாக கடந்தஒரு மாத காலமாக நீரஜ் சோப்ராபெரிய அளவிலான 3 போட்டிகளைதவறவிட்டிருந்தார். இருப்பினும் தற்போது முழு உத்வேகத்துடன் திரும்பி வந்து பட்டம் வென்றுள்ளார். தனது முதல் முயற்சியில் நீரஜ் சோப்ரா பஃவுல் செய்தார். அதன் பின்னர் 83.52 மீட்டர், 85.04 மீட்டர் தூரம் எறிந்தார். 4-வது முயற்சியை பஃவுல் செய்த நீரஜ் சோப்ரா அடுத்த முயற்சியில் வெற்றிக்கான 87.66 மீட்டர் தூரம் எறிந்தார். கடைசி வாய்ப்பை 84.15 மீட்டர் தூரத்துடன் நிறைவு செய்தார் நீரஜ் சோப்ரா.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 87.03 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தையும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற செக் குடியரசின் ஜேக்கப் வட்லெஜ்ச் 86.13 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடத்தையும் பிடித்தனர். உலக சாம்பியனான கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 82.23 மீட்டர் தூரம் எறிந்து 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
டைமன்ட் லீக் தடகள தொடரின் ஈட்டி எறிதலில் புள்ளிகள் பட்டியலில் நீரஜ் சோப்ரா 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜேக்கப் வட்லெஜ்ச் 13 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஜூலியன் வெபர் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் தொடர்கின்றனர். லாசனே போட்டியை தொடர்ந்து மொனாக்கோ, சூரிச் நகரில் அடுத்த கட்ட போட்டிகள் நடைபெறுகிறன்றன. டைமன்ட் லீக் இறுதிப் போட்டி செப்டம்பர் 16-17-ல் அமெரிக்காவின் யூஜின் நகரில் நடைபெறுகிறது.
முரளி ஸ்ரீ சங்கர் 5-வது இடம்: ஆடவருக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 7.88 மீட்டர் நீளம் தாண்டி 5-வது இடம் பிடித்தார். ஜூன் 9-ம் தேதி பாரீஸ் நகரில் நடைபெற்ற தொடரில் 24 வயதான ஸ்ரீ சங்கர் 3-வது இடம் பிடித்திருந்தார். அதேவேளையில் சமீபத்தில் புவனேஷ்வரில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டியில் 8.41 மீட்டர் நீளம் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனால் அவர், மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அதை பூர்த்தி செய்ய ஸ்ரீசங்கர் தவறினார். பஹாமஸின் லகுவான் நைரன் 8.11 மீட்டர்நீளம் தாண்டி முதலிடமும், ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸின் மில்டியாடிஸ் டெடோக்லோ (8.07) 2-வது இடமும், ஜப்பானின் யுகி ஹசி யோகா(7.98) 3-வது இடமும் பிடித்தனர்.