

புதுடெல்லி: ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமித் பங்கால், நிது கங்காஸ் ஆகியோர் இடம் பெறவில்லை.
ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய குத்துச்சண்டை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் அணியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபக் போரியா (51 கிலோ எடைப்பிரிவு), சச்சின் சிவாச் (57 கிலோ), ஷிவா தாபா (63.5 கிலோ), நிஷாந்த் தேவ் (71 கிலோ), லக்சயா சாஹர் (80 கிலோ), சஞ்ஜீத் (92 கிலோ), நரேந்தர் பேர்வால் ( 92 கிலோ) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் முன்னணி வீரரான அமித் பங்கால் தனது இடத்தை தீபக் போரியாவிடம் இழந்துள்ளார். அமித் பங்கால், ஆசிய விளையாட்டில் கடந்த முறை தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும்2019-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றி இருந்தார்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் புதிய தேர்வுக் கொள்கையின்படி, இரண்டு முதல்மூன்று வாரங்களில் குத்துச்சண்டை வீரர் பல்வேறு அளவுருக்களில் மதிப்பிடப்பட வேண்டும். இந்த வகையில்தான் அமித் பங்கால் தனது இடத்தை தீபக் போரியாவிடம் பறிகொடுத்துள்ளார். தீபக் போரியா மற்றும் நிஷாந்த் தேவ் ஆகியோர் கடந்த மே மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் அணியில் நிகத் ஜரீன் (51 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), பர்வீன் ஹூடா (57 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (66 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இரண்டு முறை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லோவ்லினா போர்கோஹைன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றனர். 48 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியனான நிது கங்காஸ் தனது இடத்தை பிரீத்தி பவாரிடம் இழந்துள்ளார். 19 வயதான பிரீத்தி பவார், உலக சாம்பியன்ஷிப்பில் சிறந்ததிறனை வெளிப்படுத்தி இருந்தார்.
2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான முதல் தகுதிப் போட்டியாக ஆசிய விளையாட்டு அமைந்துள்ளதால் குத்துச்சட்ணடை போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.