

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி ஒருவார காலம் ஆகியும் இந்திய வீரர்கள் பலர் இன்னமுன் தங்களுக்குச் சேர வேண்டிய தினப்படி தொகையைப் பெறாமல் உள்ளனர்.
தினசரி செலவுகளுக்கான தொகை நாளொன்றுக்கு 25 டாலரிலிருந்து 50 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சவ்ரவ் கோசல், தீபிகா பல்லிக்கல் உள்ளிட்ட ஸ்குவாஷ் வீரர்களுக்கு இன்னனு தினப்படி தொகை முழுதும் வந்து சேரவில்லை. டேபிள் டென்னிஸ் வீரர்கள் சிலருக்கு பாதித் தொகை நேற்று அளிக்கப்பட்டுள்ளது.
"எங்களுக்கு இன்னமும் எதுவும் கொடுக்கப்படவில்லை, ஆனால் விரைவில் தினப்படி தொகை வந்து சேரும் என்று கூறியுள்ளனர்" என்று சவ்ரவ் கோசல் கூறியுள்ளார்.
ஆடவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் விளையாடும் சௌம்யாஜித் கோஷ் என்ற வீரர் அதிகரிக்கப்பட்ட 50 டாலர் வழங்கப்படவில்லை என்றும் 25 டாலர் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளையாட்டுத் துறைச் செயலர் அஜித் ஷரண் கூறும்போது, ‘நிதித்துறையிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு கடந்த வெள்ளிக்கிழமை தினப்படி தொகை 25 டாலர்கள் அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் இந்திய ஒலிம்பிக் சங்கம் கிளாஸ்கோவில் இன்னும் கணக்கு தொடங்கவில்லை. எனவேதான் வீரர்களுக்கு இன்னும் தொகை சென்றடையவில்லை’என்றார்.
தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் செயலர் ஒருவர் தாமதம் பற்றி கூறும்போது, ‘அனைத்து பெரிய விளையாட்டுப் போட்டித்தொடர்களுக்கும் அமைச்சகம் இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சரியான தொகையை அளித்து விடும். எனவே இது காலதாமதம் மட்டுமே விரைவில் வீரர்களுக்குச் சேர வேண்டிய தினப்படி தொகை சென்றடைந்து விடும்’என்றார்.