Published : 30 Jun 2023 08:56 AM
Last Updated : 30 Jun 2023 08:56 AM

ஆஷஸ் 2-வது டெஸ்ட் | ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசல்: 416 ரன் குவித்து ஆட்டமிழந்தது ஆஸி.

ஸ்டீவ் ஸ்மித்

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார்.

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 83 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் குவித்தது. உஸ்மான் கவாஜா 17, டேவிட் வார்னர் 66, மார்னஷ் லபுஷேன் 47, டிராவிஸ் ஹெட் 77, கேமரூன் கிரீன் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 85, அலெக்ஸ் கேரி 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 100.4 ஓவர்களில் 416 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அலெக்ஸ் கேரி 22 ரன்னில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். மிட்செல் ஸ்டார்க் 6 ரன்னில் ஆண்டர்சன் பந்தில் வெளியேறினார். தனது 32-வது சதத்தை விளாசிய ஸ்டீவ் ஸ்மித் 184 பந்துகளில், 15 பவுண்டரிகளுடன் 110 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் கல்லி திசையில் நின்ற பென் டக்கெட்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

நேதன் லயன் 7, ஜோஸ் ஹேசில்வுட் 4 ரன்களில் ஆலி ராபின்சன் பந்தில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 7 விக்கெட்களை 100 ரன்களுக்கு தாரை வார்த்தது. கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி 500 ரன்களுக்கு மேல் குவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு கட்டுப்படுத்தினர். ஜோஷ் டங், ஆலி ராபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஜோ ரூட் 2 விக்கெட்களையும் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது முதல் இன்னிங்ஸில் 138 ரன்கள் பின்தங்கி உள்ளது இங்கிலாந்து.

தொடக்க வீரரான ஸாக் கிராவ்லி 48 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். ஆலி போப், 63 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து கிரீன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பென் டக்கெட், 134 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹேசல்வுட் அவரது விக்கெட்டை கைப்பற்றினார். ரூட், 10 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் வெளியேறினார். ப்ரூக் 45 ரன்களுடனும், கேப்டன் ஸ்டோக்ஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x