

செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் T20 சாம்பியனான லாகூர் லயன்ஸ் அணி விளையாடுகிறது.
2009ஆம் ஆண்டு தொடங்கிய சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 3 ஆண்டுகள் பங்கேற்றதில்லை.
2012ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் நடைபெற்றபோது தகுதிச் சுற்றில் சியால்கோட் ஸ்டாலியன்ஸ் என்ற பாக். அணி ஷோயப் மாலிக் தலைமையில் விளையாடியது. ஆனால் அது பிரதானச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
அதே போல் கடந்த ஆண்டு மிஸ்பா தலைமை ஃபைசலாபாத் அணி தகுதிச் சுற்றைத் தாண்டி முன்னேறவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மிஸ்பா உல் ஹக் தலைமையிலான ஃபைசலாபாத் உல்வ்ஸ் அணியை மொகமது ஹபீஸ் தலைமை லாகூர் லயன்ஸ் அணி வீழ்த்தி உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட் சாம்பியன் ஆனது.
சாம்பியன் லீக் தொடரில் ஐபிஎல் அணிகளுடன் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளின் இருபது ஓவர் கிரிக்கெட் சாம்பியன் அணிகள் பங்கேற்கின்றன.
இந்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
லாகூர் லயன்ஸ் அணியில் ஹபீஸ் தவிர, சர்வதேச வீரர்களான அகமது ஷேஜாத், நசீர் ஜாம்ஷெட், உமர் அக்மல் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரும் உள்ளனர்.