களத்தில் ஸ்மித்
களத்தில் ஸ்மித்

ஆஷஸ் 2-வது டெஸ்ட் | ஸ்மித் நிதான ஆட்டம்: முதல் நாளில் 339 ரன்கள் குவித்த ஆஸி.

Published on

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி சிறந்த அடித்தளம் அமைத்து கொடுத்தது. நிதானமாக விளையாடிய கவாஜா 70 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் போல்டானார். தனது 35வது அரை சதத்தை அடித்த டேவிட் வார்னர் 88 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஷ் டங் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார்.

96 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் மார்னஷ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி இன்னிங்ஸை கட்டமைத்தது. தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்திருந்தது.

லபுஷேன் மற்றும் ஸ்மித் இணைந்து 102 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 93 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து லபுஷேன், ராபின்சன் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஹெட் மற்றும் ஸ்மித் இணைந்து 118 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹெட், 73 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிரீன், ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 339 ரன்கள் எடுத்துள்ளது ஆஸி. களத்தில் ஸ்மித், 149 பந்துகளை எதிர்கொண்டு 85 ரன்கள் எடுத்துள்ளார். மறுமுனையில் அலெக்ஸ் கேரி விளையாடி வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in