

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரையில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியை பிசிசிஐ கடந்த வாரம் அறிவித்தது. இதில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையாக எழுந்துள்ளது. இந்த சூழலில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தெரிவு செய்யப்படாதது குறித்து இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரன் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
27 வயதான அபிமன்யு ஈஸ்வரன் டொமஸ்டிக் கிரிக்கெட்டில் வங்காள அணிக்காக விளையாடி வருகிறார். அவர் கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 5 சதங்கள் பதிவு செய்துள்ளார். மொத்தம் 87 முதல் தர ஆட்டங்களில் இதுவரை விளையாடி உள்ளார். அவரது பேட்டிங் சராசரி 47.9. மொத்தமாக 6557 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சூழலில் தான் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
“மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கு தேர்வாகாதது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால், மீண்டும் வாய்ப்புக்காக முயற்சி செய்வேன். எனக்கான வாய்ப்பு விரைவில் வரும் என நான் நம்புகிறேன். அதற்கு தயார் நிலையில் இருக்கிறேன். அந்த வாய்ப்பு வரும் போது திறம்பட செயல்படுவதில் எனது கவனம் உள்ளது.
இப்போதைக்கு எனது முழு கவனமும் துலீப் டிராபியில் உள்ளது. அது தான் சரியானதாக இருக்கும். எங்கள் வீட்டிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது சற்று ஏமாற்றம் தான். எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட காரணத்தால் நான் உடைந்து போகவில்லை. ஒருபோதும் எனது முயற்சியை கைவிடமாட்டேன்” என நம்பிக்கையுடன் பேசுகிறார் துலீப் டிராபியில் கிழக்கு மண்டல அணியை கேப்டனாக வழிநடத்த உள்ள அபிமன்யு ஈஸ்வரன்.